திருப்பத்தூர் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் டி.கே.ராஜா, ஜோலார்பேட்டை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கே.சி.வீரமணி ஆகியோரை ஆதரித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது பொதுமக்களிடம் பேசிய அவர், "திமுக கூட்டணியில் இருக்கும்போது திருப்பத்தூரை தனி மாவட்டமாக அறிவிக்கக் கோரி கூறியிருந்தோம். அதற்கு சற்றும் செவிசாய்க்காமல் திமுக கூட்டணி தட்டிக் கழித்தது. தற்போது தாயுள்ளம் கொண்ட முதலமைச்சர் பழனிசாமி திருப்பத்தூரை தனி மாவட்டமாக அறிவித்துள்ளார். இதன் காரணமாக அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்,
தொடர்ந்து பேசிய அவர், பொதுமக்களிடம் சிவபெருமான்-பத்மாசுரன் கதையை எடுத்துக் கூறி வரம் கொடுப்பவர் தலையிலேயே கை வைப்பவர்கள் திமுகவினர் என்று தெரிவித்தார். மேலும், "திரும்பவும் திமுகவினருக்கு ஓட்டுப் போட்டால் திருப்பத்தூரில் இருக்கும் ஜவ்வாது மலை, ஏலகிரி மலையைக்கூட விற்று விடுவார்கள். திருப்பத்தூர் மாவட்டத்திற்கு தனி மருத்துவக்கல்லூரி வர வழிவகை செய்யப்படும்" என்றார்.