திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த காதர்பேட்டையைச் சேர்ந்த லியாகத் அலியின் மனைவி ஜாஃப்ரீன் ஆசீஸ்(37). இவருக்கு சில மாதங்களுக்கு முன்பு நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வணிகவரித்துறை அலுவலகத்தில் இருந்து வரி ஏய்ப்பு நோட்டீஸ் வந்தது. அதனைக் கண்டுகொள்ளாமல் இருந்த லியாகத் அலிக்கு அதே அலுவலகத்தில் இருந்து தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்ட அதிகாரி ஒருவர், ’திருச்செங்கோடு பகுதியில் உள்ள 'குளோபல் டிரேடர்ஸ்' என்ற பெயரில் நிறுவனம் நடத்தி ரூ.6.65 கோடி வரி ஏய்ப்பு செய்த பணத்தை உடனடியாக செலுத்த வேண்டும். இல்லையென்றால், உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ எனக் கூறி அழைப்பை துண்டித்துள்ளார்.
இதனால், குழம்பிப்போன தம்பதி கூறுகையில், 'கரோனா காலகட்டத்தில் வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த ஷாஹீனா என்ற பெண் ஷாஹீனா டிரஸ்ட் என்ற நிறுவனத்தை நடத்தி வருவதாகவும், அதில் உணவு தொகுப்பு கொடுத்தவர்கள் பெயர் சேர்க்க வேண்டும் எனக்கூறி எங்களிடம் ஆதார் எண், பேங்க் பாஸ் புக் உள்ளிட்டவைகளை வாங்கினார்.
அதன் பின்னர், தங்களுக்கு பான் கார்டு வாங்கித் தருவதாகவும், தங்கள் தொலைபேசி எண்ணிற்கு வரும் ஓடிபி எண்ணைக் கூறுங்கள் எனக்கூறி ஓடிபி என்னையும் கூற வைத்தார். இதைத்தொடர்ந்தே, தங்கள் மீது வரி ஏய்ப்பு மோசடி புகார் வந்துள்ளது எனத் தெரிவித்தனர்.
இதுகுறித்து ஆம்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து, நேற்று (டிச.26) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஷாஹீனா மீதும் அதேபோல் வரி ஏய்ப்பு மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனு அளித்தனர்.
இதையும் படிங்க: தலையில் காயங்களுடன் சிகிச்சைப்பெற்ற பாதிரியார் பலி - அடித்துக் கொல்லப்பட்டாரா?