திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியிலிருந்து டெல்லி நிஜாமுதீன் தப்லீக் மத மாநாட்டிற்கு சென்று வந்த 8 நபர்களை தனிமைப்படுத்தி அவர்களின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கரோனா வைரஸ் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாணியம்பாடியின் அனைத்து பகுதிகளிலும் வீடு வீடாக சென்று காய்ச்சல், இருமல், சளியில் பாதிக்கப்பட்டவர்கள் யாரேனும் உள்ளார்களா என்பது குறித்து கணக்கெடுப்பு பணி நடந்துவந்தது.
இப்பணிகளில் சுகாதாரத்துறை தூய்மைப் பணியாளர்கள், வருவாய்த் துறையினர் என 150க்கும் மேற்பட்டோர் 75 குழுக்களாக பிரிந்து நகரம் முழுவதும் வீடு வீடாக சென்று ஈடுபட்டிருந்தனர். இச்சூழலில் வாணியம்பாடி சலாமாபாத் பகுதியில் பணியாளர்கள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது அப்பகுதி மக்களிடையே குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக கணக்கு எடுப்பதாக பரவிய தவறான தகவலால் அலுவலர்களை சிறைப்பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் சுகாதார பணியாளர்கள் மற்றும் வருவாய்த் துறையினரை மீட்டு, பிரச்னையில் ஈடுபட்ட இஸ்லாமிய இளைஞர்கள் இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் பிரச்னையில் ஈடுபட்டு தப்பி ஓடிய பலரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:தப்லிஹி மாநாட்டில் பங்கேற்றவர்கள் கரோனா பரிசோதனைக்கு உட்பட வேண்டும்