திருப்பத்தூரில் புத்தாண்டு
மக்கள் கூட்டமாகக் கூடி புத்தாண்டைக் கொண்டாடுவதற்குத் தமிழ்நாடு அரசு தடைவிதித்திருந்ததைத் தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவனருளும் பெருந்தொற்றுப் பரவாமல் இருக்க மக்கள் கூட்டமாகக் கூடுவதைத் தவிர்க்கும்பொருட்டு கேளிக்கை விடுதிகள், மதுபான கடை, பார்களில் மக்கள் கூட்டமாகக் கூடி புத்தாண்டு கொண்டாட்டம் நடத்தக் கூடாது என்று அறிவுறுத்தியிருந்தார்.
இதனால், மக்களிடையே வழக்கமான கோலாகல கொண்டாட்டம் இல்லையென்றாலும் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் புதிய ஆண்டை வரவேற்று புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றன. திருப்பத்தூர் மாவட்டத்தைச் சுற்றியுள்ள பல்வேறு தெய்வீக கோயில்களில் அரசு கட்டுப்பாடுகளைப் பின்பற்றி தகுந்த இடைவெளியைப் பின்பற்றி, முகக்கவசம் அணிந்தவாறு சிறப்பு வழிபாடு நடத்தி புத்தாண்டைக் கொண்டாடினர்.
குமரியில் கொண்டாட்டம்
இதேபோல், குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கிருஷ்ணன்கோவில் மாதர் தெருவில் உள்ள ஆதிபராசக்தி கோயிலில் ஆண்டுதோறும் ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல் இந்த வருடமும் ஆங்கிலப் புத்தாண்டு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
மண்வளம், மழைவளம் வேண்டியும், கொடிய நோயான கரோனாவின் தாக்கத்திலிருந்தும், உருமாறிய காரோனாவில் இருந்தும் விடுபடவும் அபிஷேகம், சக்தி பீட தலைவர் சின்னத்தம்பி தலைமையில் கூட்டு தியானம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 500 பேருக்கு ஆடை தானம், அன்ன தானம் வழங்கப்பட்டது.
புத்தாண்டை வரவேற்ற காஞ்சி
காஞ்சிபுரத்தில் புத்தாண்டை முன்னிட்டு உலகப் பிரசித்திப் பெற்ற காமாட்சி அம்மன் கோயில், குமரக்கோட்டம் முருகன் கோயில், வரதராஜப் பெருமாள் கோயில் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் சாமிக்குச் சிறப்புத் திருமுழுக்கு ஆராதனைகள் நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்து தரிசனத்திற்குத் திறக்கப்பட்டது.
இதையடுத்து, இன்று (ஜன. 01) காலை முதலே ஏராளமான பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினருடன் கோயில்களுக்குச் சென்று தகுந்த இடைவெளியுடன், முகக்கவசம் அணிந்து நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்துவருகின்றனர்.
கோவையில் கொண்டாட்டம்
கோயம்புத்தூரில் ஈச்சனாரி, புளியகுளம், கோனியம்மன் உள்ளிட்ட அனைத்துக் கோயில்களிலும் புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்கள் அதிகளவில் சென்று சாமி தரிசனம்செய்தனர். அதேபோன்று கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தேவாலயத்தில் மக்கள் பிரார்த்தனை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: தேவாலயங்களில் புத்தாண்டு தின சிறப்பு வழிபாடு!