திருப்பத்தூர்: வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் ஒன்றியம் சிந்தகமானிபெண்டா கிராமத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை இயங்கும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக கலையரசி என்பவர் பணியாற்றி வருகிறார். பள்ளியில் சுமார் 120க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில் பள்ளியின் தலைமை ஆசிரியரான கலையரசி, பள்ளி மாணவ மாணவிகளை தனது சொந்த வேலையான வீட்டு வேலையையும், பள்ளியின் கழிவறைகளையும் சுத்தம் செய்யும் வேலைகளையும் செய்ய சொல்வதாக பள்ளி மாணவர்கள் தங்களின் பெற்றோர்களிடம் கூறியுள்ளனர்.
இதனால் பள்ளியின் தலைமை ஆசிரியரான கலையரசியை பள்ளியில் இருந்து மாற்றக்கோரி மாணவ - மாணவிகளின் பெற்றோர்கள் மட்டுமின்றி ஊர் பொதுமக்கள் (ஜூலை 7) திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அவர்களிடம் மனு அளித்தனர்.
பின்னர் இதுகுறித்து சிந்தகமணிபெண்டா கிராமத்தை சேர்ந்த கோவிந்தன் என்பவர் கூறுகையில், "நாங்கள் சிந்தகமணிபெண்டா மலைப்பகுதியை சேர்ந்தவர்கள். எங்கள் பகுதியில் செயல்பட்டு வரும் நடுநிலைப் பள்ளியில் தான் எங்கள் குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். அந்த பள்ளியின் தலைமையாசிரியராக பணியாற்றி வரும் கலையரசி என்பவர் பள்ளி குழந்தைகளை அவரது வீட்டில் டீ வைத்து கொடுக்கவும், பாத்திரங்களை கழுவவும், மேலும் கழிவறைகளையும் சுத்தம் செய்யச் சொல்லி படிக்க அணுப்பிய குழந்தைகளிடம் வேலை வாங்கியுள்ளார். தலைமை ஆசிரியரின் இந்த செயலால் மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இதனை தொடர்ந்து மாணவர்களை வேறு பள்ளியில் சேர்க்க மாற்றுச்சான்றிதழ் கேட்டால், தலைமையாசிரியர் கலையரசி மாற்றுச்சான்றிதழ்களை தர மறுக்கிறார். இதனால் தலைமையாசிரியரை மாற்றக்கோரி ஊர்மக்கள் மற்றும் பொதுமக்கள் மாவட்ட கல்வி அலுவலரிடம் மனு அளித்தோம்.அதனை தொடர்ந்து புதிய உதவி தலைமையாசிரியர் பள்ளி வந்தார்கள். ஆனால் தலைமையாசிரியரான கலையரசி பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பாக பொய்யாக கையொழுத்திட்டு மாவட்ட கல்வி அலுவலரிடம் அளித்துள்ளார். அதனால் கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து தலைமையாசிரியர் கலையரசியை மாற்றக்கோரி திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியனிடம் மனு அளித்துள்ளோம்” என தெரிவித்தார்.
படிக்கும் பள்ளி மாணவர்களை அடிப்பதே தவறு எனக் கூறப்படும் நிலையில், தலைமை ஆசிரியராக இருந்து கொண்டு குழந்தைகளை தனது சொந்த வேலையை செய்து தரும் தொழிலாளியாக நடத்தும் தலைமை ஆசிரியரின் செயல் கண்டிக்கத்தக்கது என பெற்றோர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
இதையும் படிங்க: Mekedatu: கர்நாடக பட்ஜெட்டில் மேகதாது அணை அறிவிப்பு; கலக்கத்தில் தமிழக விவசாயிகள்!