திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன் (62). இவர் கார் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார்.
இச்சூழலில் இவருக்கு சில ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் பணிக்கு செல்லாமல், சில மாதங்களாக இவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஊரடங்கு காலத்தில் தனது மகள், மகன் அனைவரும் வீட்டில் வந்து தங்கியுள்ளதால், தன்னால் முயன்ற பண உதவிகள் எதையும் செய்ய முடியவில்லை என அடிக்கடி தனது மனைவிடம் கூறிவருவாராம்.
இதனால் மேற்கொண்டு மனவேதனை அடைந்த பிரபாகரன், நேற்று இரவு வீட்டில் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த போது வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதனையடுத்து அதிகாலை, பிரபாகரனை வீட்டில் இருந்தவர்கள் பல இடங்களில் தேடினர்.
அப்போது, ஜோலார்பேட்டை ரயில்வே தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத ஆண் உடல் கிடப்பதாக வந்தத் தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே காவல் துறையினர், பிரபாகரனின் வீட்டிற்கு தகவல் அளித்தனர்.
அதன் பின்னர் அங்கு வந்த வீட்டினர் இறந்தது பிரபாகரன் தான் என உறுதி செய்தனர். இதனையடுத்து அவரது உடல் உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இதையும் படிங்க: கணவர் இறந்த அதே நாளில் தாய், மகன் தற்கொலை