குடியாத்தம் தாலுகா, ஒலக்காசி கிராமம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் மோகன். இவருடைய மனைவி லட்சுமி, இவர்களது மகன் ஜெயபிரகாஷ். வேலூர் சரக டி.ஐ.ஜி ஆனி விஜயாவிடம் ஜெயபிரகாஷ் நேற்று(மே.19) புகார் மனு ஒன்று அளித்தார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது, "நாங்கள் குடியாத்தம் தாலுகா ஒலக்காசி கிராமத்தில் வசித்து வருகிறோம். கீழ் ஆலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஜான் மோசஸ் என்பவர் தனக்கு சொந்தமான நிலத்தை எனது தாத்தா விநாயகம்பிள்ளையிடம் 1973 ஆம் ஆண்டு அடமானம் வைத்தார்.
அன்று முதல் அந்த சொத்து எங்களது அனுபவத்தில் உள்ளது. மலர்வேணி என்பவர் 17- 3- 2022 அன்று போலியாக பத்திரப்பதிவு செய்து எங்கள் அனுபவத்தில் உள்ள நிலத்தை தான் வாங்கி விட்டதாக கூறி அடியாட்களை வைத்து மிரட்டுகிறார். எனது தந்தை மோகன், தாய் லட்சுமி ஆகியோர் வீட்டில் தனியாக இருக்கும்போது கஸ்பா மேகநாதன் சேர்த்து வண்டை நாகராஜ், சண்முகம் மற்றும் சிலர் பயங்கர ஆயுதங்களுடன் நேற்று வந்து தாக்கினர்.
இதில் எனது தந்தை மோகன், தாய் லட்சுமி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இருவரும் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் எனது தந்தை தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
தாய், தந்தையை தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து போலியாக பத்திரப்பதிவு செய்த நிலத்தை மீட்டு தரும்படி கேட்டுக்கொள்கிறேன்" இவ்வாறு அவர் புகார் மனுவில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: சூப்பர் மார்கெட்டில் ரூ.17 ஆயிரம் திருட்டு: சிசிடிவி காட்சி வெளியீடு