திருப்பத்தூர்: நிவர் புயலால் பாதிக்கப்பட்டு ஆம்பூர் காதுகேளாதோர் பள்ளியில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுக்கு மழை நிவாரண பொருள்களையும், மழையால் சேதமடைந்த 4 வீடுகளுக்கு நிவாரணமாக 4ஆயிரம் ரூபாய் காசோலையையும் வணிகவரி, பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் கே.சி. வீரமணி வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "முதலமைச்சரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் அனைத்து மாவட்டங்களிலும் புயலால் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை.
திருப்பத்தூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர், அவருடைய குழுவினர் சேர்ந்து எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக மாவட்டத்தில் எந்தப்பகுதியிலும் எந்த சேதாரமும் ஏற்படவில்லை. ஆனால், ஒரு சில இடங்களில் பழைய வீடுகளில் உள்ள ஓடுகள், ஐந்துக்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் சேதமடைந்துள்ளன. மாவட்டத்தில் 15 லிருந்து 20 மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன.
மாவட்டத்தில் இதுவரை புயலால் எந்தவித உயிரிழப்பும் ஏற்படவில்லை. ஒரு கால்நடை மட்டும் உயிரிழந்தது. ஆற்றுப்படுகையில் வாழ்ந்து வந்த மக்கள் சுமார் 700 பேர் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான அனைத்து அத்தியாவசியப் பொருள்களையும் மாவட்ட நிர்வாகம் வழங்கிவருகிறது. வட தமிழ்நாட்டில் உள்ள வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஆனால், இதுவரை எவ்வித உயிர்சேதமும் ஏற்படவில்லை. அனைத்து விதத்திலும் தமிழ்நாடு சிறப்பாக செயல்பட்டு இந்தியாவின் முதன்மை மாநிலமாக திகழ்கிறது" என்றார்.
இதையும் படிங்க: அரசு நடவடிக்கையால் உயிர் சேதங்கள் பெருமளவில் இல்லை’ : அமைச்சர் வேலுமணி