திருப்பத்தூர்: தென்னிந்தியத் தோல் மற்றும் காலணி தொழிலதிபர்கள் சங்க கூட்டம் ஆம்பூரில் உள்ள வர்த்தக மையத்தில் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராகத் தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஏ.வ.வேலு கலந்து கொண்டு பேசினார்.
அதில் இஸ்லாத்தையும், திராவிடத்தையும் எப்பொழுதும் பிரிக்க முடியாது ஏனெனில் இரண்டும் நாணயம் போன்றது. ஆம்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏறத்தாழ 227 தோல் பதனிடும் தொழிற்சாலைகளும், 110 காலணி தொழிற்சாலைகளும் உள்ள நிலையில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இப்பகுதியில் பணியாற்றி, ஆண்டிற்கு 5000 கோடி இந்திய அளவில் 18 சதவீதம் அன்னிய செலாவணியும், தமிழ்நாடு அளவில் 80 சதவீதம் அன்னிய செலாவணியையும் ஈட்டி தருகிறது.
ஆகவே ஆம்பூரில் காலணி தொழிற்பூங்கா அமைத்து, தொழிற்சாலையில் பெண்கள் பணியாற்றத் தனியாக விடுதிகள் கட்டப்படும். நெடுஞ்சாலைத்துறை சார்பில் தனியாகக் குழு ஒன்று அமைத்து ஆம்பூர் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு தேவைப்படும் இடங்களில் சாலைகள் விரிவாக்கம் செய்யப்படும் என தெரிவித்தார்.