திருப்பத்தூர்: திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரிப் பேராசிரியர் பிரபு, தொல்லியல் ஆய்வாளரும் வரலாற்றுத்துறைப் பேராசிரியருமான சேகர், ஆய்வு மாணவர் தரணிதரன், உதவிப்பேராசிரியர் சுனில், சமூக ஆர்வலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர், திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே உள்ள "சுடுகாட்டூர்" என்ற இடத்தில் கள ஆய்வு மேற்கொண்டு வந்தனர்.
இந்த கள ஆய்வில் சுமார் மூன்றாயிரம் ஆண்டுகள் பழமையான பெருங்கற்காலத் தடயங்கள் கிடைத்துள்ளதாகப் பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பேசிய பேராசிரியர் பிரபு, "திருப்பத்தூரில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இப்பகுதியில் கள ஆய்வை மேற்கொண்டோம். அப்போது சுடுகாட்டூர் மாரியம்மன் கோயில் எதிரே உள்ள மங்கை பெருமாள் என்பவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் சுமார் மூன்றாயிரம் ஆண்டுகள் பழமையான பெருங்கற்காலத் தடயங்கள் கிடைத்துள்ளன.
இந்நிலத்தில் உழவுப்பணி மேற்கொண்டபோது பல மண் ஓடுகளும், மண்ணால் செய்யப்பட்ட பொருட்களும் கிடைத்தன. நாங்கள் அவற்றைச் சேகரித்து ஆய்வு செய்தபோது அவை, கறுப்பு, சிவப்பு மண்பாண்ட ஓடுகள் என்பதை அறிய முடிந்தது. இன்னும் சிறப்பாக பெருக்கற்காலத்தோடு தொடர்புடைய ஈமப்பேழையின் ஊன்று கால் ஒன்றும் கிடைத்திருப்பது சிறப்புக்குரியதாகும்.
ஈமப்பேழைகள் என்பவை பெருங்கற்காலத்தில் இறந்தவர்களை அடக்கம் செய்யப் பயன்படுத்தப்பட்டவை. இவை சுடு மண்ணால் செய்யப்படுபவை. இவை பெருங்கற்காலச் சின்னங்களான, கல்வட்டம் மற்றும் கற்பதுக்கை ஆகியவற்றின் உள்ளே வைக்கப்பட்டிருக்கும். இவை செவ்வக வடிவில் குளியல் தொட்டி போன்று (Bathtub) காணப்படும். இறந்த உடலை உள்ளே வைத்து மூடி போன்ற அமைப்பைக் கொண்டு மேற்புறம் மூடப்பட்டிருக்கும். அடிப்பகுதியில் இரண்டு அல்லது மூன்று வரிசைகளில் ஊன்று கால்கள் அமைந்திருக்கும்.
சில ஈமப்பேழைகள் விலங்கு வடிவிலும் இருந்திருக்கின்றன. ஆந்திர மாநிலம், சங்கவரத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கிடைத்த ஈமப்பேழை, ஆடு போன்ற வடிவத்தில் உள்ளது. கேரளாவில் பசுமாட்டின் வடிவில் ஈமப்பேழை கிடைத்துள்ளது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை காஞ்சிபுரம் மாவட்டம் சானூரில் நடைபெற்ற அகழாய்வுகளில் பல கற்பதுக்கைகளுக்கு உள்ளே இவை கண்டறியப்பட்டுள்ளன. இவை தாழிகள் போலப் பயன்படுத்தப்பட்டன. ஆனால், தோற்றத்தில் ஈமத்தாழிகள் என்பவை வேறு, ஈமப்பேழைகள் என்பவை வேறு. இறந்தவர்களின் எலும்புகள், புழங்கு பொருட்கள் இவற்றின் உள்ளே வைக்கப்பட்டன. முதுமக்கள் தாழிகளைப் போல அதிகளவில் இவை காணப்படுவதில்லை. சில இடங்களில் மட்டுமே கிடைத்துள்ளன. அன்றைய சமூகத்தில் இனக்குழுத் தலைவர்கள் போன்ற தலைமைத்துவத்தில் இருந்தவர்களுக்காக தனித்துவமாக, இவை பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.
கறுப்பு, சிவப்பு நிறத்தில் கண்டெடுக்கப்பட்ட மண்பாண்ட ஓடுகள் ஈமப்பேழையில் வைக்கப்பட்ட புழங்கு பொருட்களுடையதாக இருக்கலாம். இங்கு கண்டறியப்பட்ட ஓடுகள் 4 மி.மீ தடிமன் கொண்டவை. ஈமப்பேழையின் கால் 14 செ.மீ நீளமும், அதன் வட்ட வடிவமான அடிப்பகுதி 5.5 செ.மீ., சுற்றளவும் கொண்டதாக உள்ளது. பேழையின் பக்கவாட்டுப் பகுதியில் இருந்து கிடைத்த ஒரு துண்டானது 4 செ.மீ., தடிமன் கொண்டதாக உள்ளது.
பேழையானது களிமண்ணால் செய்யப்பட்டு சுட்டெடுக்கப்பட்டுள்ளது. அதன் உட்புறம் அடர்கருமை நிறத்திலும் வெளிப்புறங்கள் செங்காவி நிறம் பூசப்பட்டும் காணப்படுகின்றது. இவ்வூர் 'சுடுகாட்டூர்' என்று அழைக்கப்படுவதும் கவனத்திற்குரியதாகும். ஏனென்றால், இது போன்ற ஈமச்சின்னங்கள் மக்கள் வாழ்விடங்களுக்கு அருகில்தான் பெரும்பாலும் கண்டறியப்பட்டுள்ளன. திருப்பத்தூர் மாவட்டத்தின் பல இடங்களில் இது போன்ற பழங்கால மக்களின் வாழ்வியல் தடயங்கள் தொடர்ந்து கண்டறியப்பட்டு வருவது மாவட்டத்தின் வரலாற்றுப் பின்புலத்தினை பறைசாற்றுவதாக உள்ளது" என்று கூறினார்.
இதையும் படிங்க:வீடியோ: பசுவின் மடியில் பால் குடிக்கும் குழந்தை