திருப்பத்தூர்: ஆம்பூரில் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் 143 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேம்பாலம், சாலை விரிவாக்கம் மற்றும் கால்வாய் அமைக்கும் பணிகள் கடந்த மாதம் தொடங்கப்பட்டது. அதற்கான வேலைகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஆம்பூரில் தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு நெடுஞ்சாலைகள் ஓரம் கால்வாய் அமைக்க 5 அடிக்கும் மேல் நெடுஞ்சாலை துறையினர் பள்ளம் தோண்டியுள்ளனர். இந்நிலையில், அப்பள்ளத்தில் வங்கி மற்றும் தொலைதொடர்புகளுக்குத் தேவையான கம்பிகளின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது.
அக்கம்பிகளில் மீண்டும் இணைப்புகள் இணைக்காததால் நெடுஞ்சாலை துறையினர் பள்ளத்தை மூடாமல் வைத்துள்ளனர். இந்நிலையில் நேற்று (ஆக.13) மாலை ஆம்பூர் ரயில் நிலையம் எதிரே தோண்டப்பட்ட பள்ளத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர் நிலை தடுமாறி தவறி விழுந்தார்.
உடனடியாக சிறுகாயங்களுடன் அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர், அவரை உடனடியாக ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிகழ்வு அப்பகுதியில் இருந்த கடையின் சிசிடிவியில் பதிவாகியிருந்தது. அந்த காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. மேலும், சாலையோரம் தோண்டப்பட்ட பள்ளங்களை நெடுஞ்சாலை துறையினர் உடனடியாக மூட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: மனைவியிடம் தகாத முறையில் நடந்த கும்பல்... தட்டிக் கேட்ட கணவருக்கு அடி உதை... வேடிக்கை பார்த்த போலீசாருக்கு நன்றி...