திருப்பத்தூர்: திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ் பழங்குடி குறவன் சங்கம் சார்பில், பள்ளி மாணவ - மாணவிகள் பட்டியல் இனச் சான்றிதழ் கேட்டு, கடந்த இரண்டு நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் போராட்டத்தின் 3-வது நாளான இன்று (மார்ச் 1) காலை சமைப்பதற்காக வட்டாட்சியர் அலுவலகத்தின் நுழைவு வாயிலில் அடுப்பு வைத்து சமைக்க முயன்றனர்.
அப்போது, அவர்களை அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் துறையினர் தடுத்து நிறுத்தி உள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பள்ளி மாணவர்கள், அவர்களுடைய பெற்றோருடன் நுழைவு வாயிலில் முட்டிப்போட்டு நூதன முறையில் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தின்போது ‘பிச்சை போடு பிச்சை போடு, எங்கள் மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் பிச்சை போடு, கல்வி பிச்சை போடு’ என்று கோஷங்கள் எழுப்பினர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தங்களுக்கு பட்டியல் இன சான்றிதழ் இன்றே இப்போதே கொடுக்க வேண்டும் என்றும்; தங்களது கோரிக்கைகளை முன் வைத்தனர். அதேநேரம் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் என்பதால், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பள்ளி மாணவர்கள் முதலமைச்சரின் புகைப்படத்திடம் மனு கொடுத்தும் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். மேலும் இன்று முதல் பட்டினி போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்தனர்.
முன்னதாக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களின் உண்மை நிலையை அறிந்து, அவர்களுக்கு அவர்களின் பகுதிகளுக்கே சென்று பட்டியல் இன சான்றிதழ் வழங்க தாசில்தார்களுக்கு அறிவுறுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வட்டாட்சியர் அலுவலகத்தில் 2-வது நாளாக பட்டியல் இன சான்றுகோரி குறவர் மாணாக்கர்கள் போராட்டம்