திருப்பத்தூர்: திருப்பத்தூர், டபேதார் முத்துசாமி பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் இப்பகுதியில் உள்ள பஜாரில் நகைக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று (டிச.13) இரவு, கர்நாடகா மாநில கே.ஜி.எஃப் பகுதி காவல் ஆய்வாளர் நவீன் குமார், இவரின் கடைக்கு வந்து, “உங்கள் கடையில் விற்பனை செய்த அரை கிலோ தங்கத்தை கொடுக்க வேண்டும்” என்று கேட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த வெங்கடேசன், தான் எந்த தங்கத்தையும் வாங்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, காவல் ஆய்வாளர், திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்பவரை அழைத்து வந்து, இவர்தான் உங்கள் கடையில் தக்கத்தை விற்பனை செய்தார் என்று தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, சதீஷ் என்பவரும் இவரிடம் தங்கத்தை விற்பனை செய்தேன் என்று தெரிவித்ததன் அடிப்படையில், நகைக்கடை உரிமையாளரை காவல் ஆய்வாளர் கர்நாடகாவிற்கு அழைத்துச் செல்ல முயன்றுள்ளனர்.
இதனையறிந்த அப்பகுதி நகைக்கடை உரிமையாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, கர்நாடக காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இது போன்று கர்நாடக காவல்துறையினர், வாங்காத நகையை வாங்கியதாக்க கூறி நகைக்கடை உரிமையாளர்களை நிர்பந்திக்கின்றனர் என அவர்கள் குற்றம் சாட்டினர். எனவே, இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகைக்கடை பஜாரில் இருந்து ஊர்வலமாக திருப்பத்தூர் நகர காவல் நிலையத்திற்குச் சென்றனர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த திருப்பத்தூர் டி.எஸ்.பி செந்தில், கர்நாடக காவல்துறையிடம் இது தொடர்பாக கேட்டுள்ளார். இதன்படி, பெங்களூரைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர், பல்வேறு பகுதிகளில் நகையை திருடி, அவரது மைத்துனரான திருப்பத்தூர் சதீஷிடம் கொடுத்து, வெங்கடேசன் என்பவரின் கடையில் விற்பனை செய்துள்ளது தெரிய வந்துள்ளது. அதன் அடிப்படையில், இவரிடம் நகையை பறிமுதல் செய்ய வந்தோம் என்று தெரிவித்துள்ளனர்.
அதற்கு டி.எஸ்.பி செந்தில், வெளி மாநிலங்களிலிருந்து காவல்துறையினர் வரும்பொழுது, மாவட்ட காவல்துறையினருக்கும், அந்த பகுதி காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும். ஆனால், நீங்கள் தங்களுக்கு தகவல் தெரிவிக்காமல், இது போன்ற செயல்களில் ஈடுபடுவதால் தற்போது சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். பின்னர் இதுகுறித்து, நகைக்கடை உரிமையாளர் வெங்கடேஷனிடம் விசாரணை செய்ததில், இதுபோன்று எந்த நபரிடம் இருந்தும் தான் தங்கத்தை வாங்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, கர்நாடக காவல் துறையினர், விசாரணைக்காக நாங்கள் அழைத்துச் செல்ல வேண்டும் என்று மனு எழுதி காவல் நிலையத்தில் அளித்தனர். மனு அளித்ததன் அடிப்படையில், நகைக்கடை உரிமையாளரை காவல்துறையினர் கர்நாடகாவிற்கு அழைத்துச் சென்றனர்.
இதையும் படிங்க: ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து இரண்டாம் நாள் கோலாகலம்.. ரெங்கநாதரின் மிளிரும் புகைப்படங்கள்!