திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த பாலூர் ஆர்.பட்டி பகுதியை சேர்ந்தவர் விஜயன் (28). இருளர் இனத்தை சார்ந்த இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் கர்நாடக மாநிலம் ஹசான் மாவட்டம் கன்னிகடா கிராமத்தில் கரும்பு வெட்டும் பணிக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக விஜயன் வீடு திரும்பாததால், அவரை காண அவரது உறவினர்கள் கன்னிகடா கிராமத்திற்கு சென்றுள்ளனர்.
அப்போது அங்கு அவர் கொத்தடிமையாக வேலை பார்த்து வந்தது தெரியவந்தது. அதோடு விஜயனை காண சென்ற உறவினர்களும் கொத்தடிமைகளாக மாட்டிக்கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த சமூக ஆர்வலர் சம்பத் என்பவர் கர்நாடக மாநிலம் ஹசான் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றத்தில், இந்த சம்பவம் குறித்து மனு அளித்துள்ளார்.
அம்மனுவின் மீது விசாரணை மேற்க்கொண்ட சந்திராபட்னா வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் கன்னிகடா பகுதியில் கொத்தடிமைகளாக இருந்த விஜயன் உட்பட அவரது உறவினர்களான 11 பேரை மீட்டு இன்று (டிசம்பர் 18) காலை வாணியம்பாடி வருவாய் கோட்டாச்சியர் பிரேமலதா தலைமையிலான அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
இதனை தொடர்ந்து 11 பேரையும் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்த அதிகாரிகள், விஜயன் உட்பட அவரது குடும்பத்தினரை சேர்ந்த 8 பேரின் வங்கி கணக்கில் தமிழக அரசு சார்பில் 30 ஆயிரம் ரூபாய் செலுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: காவல் ஆணையர் அலுவலகத்திற்குள் ரத்தத்துடன் நுழைந்த இளைஞர்: சமாதானம் செய்த பெண் காவலர்