திருப்பத்தூர்: தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற சர்வதேச ரிங்பால் போட்டியில், இந்தியா சார்பில் பங்கேற்று ஜூனியர் பிரிவில் தங்கமும் சீனியர் பிரிவில் வெண்கல பதக்கம் வென்று ஊர் திரும்பிய வளையாம்பட்டு பகுதியை சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு, ஊர் மக்கள் மேள தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சர்வதேச அளவில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ரிங்பால் போட்டி, இந்த ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 7 ஆம் தேதி வரை நடைபெற்று. இந்த ரிங்பால் போட்டியில், இந்தியா, ஜெர்மன், தென் ஆப்பிரிக்கா, கென்யா, அமெரிக்கா, கானா, இங்கிலாந்து, நைஜிரியா, சீனா ஆகிய 9 நாடுகள் பங்கேற்றன.
இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற சர்வதேச ரிங்பால் போட்டியில் இந்தியா சார்பில், பயிற்சியாளர்கள் முரளி, சங்கர், ஷாம் சுந்தர் தலைமையில், சீனியர் மற்றும் ஜூனியர் அணியின் 40 பேர் கொண்ட வீரர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: அத்திப்பள்ளி பட்டாசு கடை வெடி விபத்து: ஒரே கிராமத்தைச் சேர்ந்த 7 பேரின் உடல்கள் தகனம்!
ஜூனியர் பிரிவில் இறுதிப் போட்டியிற்கு முன்னேறிய இந்திய வீரர்கள், ஜெர்மன் வீரர்களை 7-க்கு 3 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று தங்க பதக்கத்தை கைப்பற்றியது. மேலும், சீனியர் பிரிவில் இந்திய வீரர்கள் தென் ஆப்பிரிக்கா வீரர்களிடம் 4-க்கு 6 என்ற புள்ளிகள் கணக்கில் தோற்று வெண்கலப் பதக்கத்தை வென்றனர்.
மேலும், இந்தியா சார்பில் சீனியர் பிரிவில் பங்கேற்ற திருப்பத்தூர் மாவட்டம், வளையாம்பட்டு பகுதியை சேர்ந்த அறிவழகன் மற்றும் அபிஷேன் வெண்கலப் பதக்கமும், ஜூனியர் பிரிவில் பங்கேற்ற வளையாம்பட்டு பகுதியை சேர்ந்த சுகி வர்மன் என்பவர் தங்க பதக்கம் வென்று உள்ளனர்.
இந்நிலையில், போட்டியில் வெற்றி பெற்ற அனைவரும் பதக்கங்களுடன் நாடு திரும்பிய நிலையில், வளையாம்பட்டு ரயில் நிலையத்தில் பதக்கம் வென்ற வீரர்களை அவர்களின் உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் மாலை அணிவித்து மலர் தூவி மேள தாளங்கள் முழங்க உற்சாகமாக வரவேற்றனர். மேலும், தமிழக அரசு சார்பில் எங்களுக்கு மென்மேலும் பல உதவிகளை வழங்க வேண்டும் என வீரர்கள் கேட்டுக்கொண்டனர்.
இதையும் படிங்க: கேரளாவுக்கு கடத்த முயன்ற ரூ.70 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்.. போலீஸ் தீவிர விசாரணை!