திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே கிரிசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ். இவர் செட்டியப்பனூர் ரேஷன் கடை தெருவில் சுந்தரம் என்பவருக்கு சொந்தமான வீட்டை மாதம் ரூ.25 ஆயிரம் என்று பேசி வாடகைக்கு எடுத்துள்ளார். அதில் அக்ஷயம் பைனான்ஸ் என்ற பெயரில் கடந்த மாதம் நிதி நிறுவனம் ஆரம்பித்துள்ளார்.
இந்த நிதி நிறுவனத்தில் ரூ.2,652 கட்டினால் ரூ.40 ஆயிரம் லோன் கொடுப்பதாக விளம்பரம் செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து மகளிர் குழுக்களை சேர்ந்த 1,300 பெண்கள் தலா ரூ.2,652 பணத்தை அவரிடம் கொடுத்துள்ளனர். மாத இறுதியில் தலா ரூ.40 ஆயிரம் லோன் கொடுப்பதாக உறுதியளித்திருந்தார்.
இந்த நிலையில் விக்னேஷ் 2 தினங்களுக்கு முன்பு வீட்டு உரிமையாளர்களுக்கு ஒரு மாதம் வாடகை கொடுத்துவிட்டு வசூல் செய்த லட்சக் கணக்கான ரூபாயை எடுத்துக் கொண்டு தலைமறைவானார்.
இதனை அறிந்த பாதிக்கப்பட்ட பெண்கள் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்த ராமகிருஷ்ணன் என்பவரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் குறித்து கிராமிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:சென்னையில் செல்போன் கடையில் திருட்டு - போலீஸ் விசாரணை