திருப்பத்தூர்: திருப்பத்தூர் அடுத்த பொம்மிக்குப்பம் பழத்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் மதன்குமார் (36). இவருக்கும் பள்ளவள்ளி பகுதியைச் சார்ந்த விஜயசாந்தி (25) என்பவருக்கும் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று, 7 வயது மற்றும் 2 வயதில் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில், பள்ளவள்ளி பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் (25) என்பவருக்கும், மதன்குமார் மனைவி விஜயசாந்தி ஆகிய இருவருக்கும் ஏற்கனவே காதல் வயப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், திருமணம் நடைபெற்று இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த அக்டோபர் 8ஆம் தேதி பிரபாகரன் மற்றும் விஜயசாந்தி ஆகிய இருவரும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக கூறுகின்றனர்.
இது குறித்து கடந்த அக்டோபர் 9ஆம் தேதி, மனைவியை மீட்டுத் தரக்கோரி கணவர் மதன்குமார் திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால், போலீசார் புகாரின் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது. எனவே, வீட்டை விட்டு வெளியேறிய இருவரையும் தேடும் பணியில் உறவினர்களே இறங்கியதாகத் தெரிகிறது.
அதன்படி ஈரோடு, பெங்களூரு, வேளாங்கண்ணி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் அவரது மனைவி கிடைக்கவில்லை. எனவே காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்காமல், காலதாமதம் செய்ததால் ஆத்திரமடைந்த கணவர் மற்றும் அவருடைய உறவினர்கள் 10க்கும் மேற்பட்டோர், திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையம் முன்பு திடீரென தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் அறிந்து வந்த திருப்பத்தூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார், மனைவியை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.