உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை விழிப்புணர்வு இல்லாமல் இருசக்கர வாகனங்களில் பொதுமக்களும், இளைஞர்களும் சாலைகளில் சுற்றித்திரிந்து-கொண்டிருந்தனர்.
இது குறித்து தகவலறிந்து அங்கு வந்த காவல் துறை ஆய்வாளர் சீனிவாசன் தலைமையிலான காவலர்கள் இருசக்கர வாகனங்களில் வந்த பொதுமக்களையும், இளைஞர்களையும் தடுத்துநிறுத்தி கரோனா வைரஸ் பரவுதல் குறித்து எடுத்துக் கூறினர். பின்னர் அவர்களை சாலையில் ஒரு மீட்டர் இடைவெளியில் நிற்க வைத்து கரோனா ஒழிப்பு உறுதிமொழி எடுக்கவைத்தனர்.
இதில், நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் தாங்கள் இனிமேல் சட்டத்தை மதித்து சாலைகளில் நடமாட மாட்டோம் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். மேலும் சட்டத்தை மதிக்காமல் சாலையில் சுற்றித்திரிந்தவர்களைக் காவல் துறையினர் உறுதிமொழி எடுக்கவைத்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றது.
இதேபோல், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர், வாணியம்பாடி பகுதிகளில் 144 தடை உத்தரவை மீறி இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்தவர்களின் 18 இருசக்கர வாகனங்களைக் காவல் துறையினர் பறிமுதல்செய்தனர்.
இதையும் படிங்க:சென்னையில் ஒரே நாளில் தடையை மீறி சுற்றியதாகக் கூறி 1,400 வழக்குகள் பதிவு!