வாணியம்பாடி அருகே தீத்தடுப்பு, வனங்களைப் பாதுகாத்தல் குறித்து தீயணைப்புத் துறை, வனத்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த விழிப்புணர்வில் தீயணைப்பு, வனத்துறை அலுவலர்கள், வீட்டில் சமையல் செய்யும்போது தீப்பிடித்தால் எப்படி எதிர்கொள்வது உள்ளிட்ட செயல்முறையை செய்துகாட்டினர்.
பின்னர் ஒருவர் ஆபத்தில் இருந்தாலோ, வனவிலங்குகள் ஆபத்தில் இருந்தாலோ எப்படி காப்பாற்றுவது, அது முடியாத பட்சத்தில் சம்பந்தப்பட்ட துறைக்குத் தகவல் தெரிவிப்பது எப்படி என்பது குறித்து விளக்கப்பட்டது. மேலும், வன விலங்குகளுக்கு தேவையான பல வகை பழங்கள் தரக்கூடிய செடிகளை வைத்து வனத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
அலுவலர்கள் பொதுமக்களுக்குக் கூறிய கூடுதல் ஆலோசனைகள் கீழ்வருமாறு:
- வனவிலங்குகளைப் பாதுகாத்தல்
- மரங்களை வெட்டக்கூடாது
- பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் உள்ளே போகக்கூடாது
- விதைப்பந்துகள் தயாரித்து வனப்பகுதியிலும் கிராமப்புறங்களிலும் அதிகமாக பரப்புங்கள்
- பொது இடங்களில் தீப்பற்ற வைக்கக் கூடாது, அக்கம் பக்கத்தில் தீ ஏற்பட்டால் உடனடியாகத் தகவல் தெரிவிக்க வேண்டும்
- கிராமப்புறங்கள், நகர்ப் புறங்களிலும் அதிகப்படியாக சேரும் நெகிழிப் பொருட்களை பொது இடங்களில், வனப்பகுதிகளில், நீர்நிலைப் பகுதிகளில், வீடுகளைச் சுற்றியும் போடக்கூடாது
- பிளாஸ்டிக் பொருட்களை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும்
- வனங்களைப் பாதுகாத்தல், மரங்களை வளர்த்தல் மூலமாக நிலத்தடி நீர்மட்டம் உயரும், விவசாயம் பெருகும், தண்ணீர் பஞ்சம் தீரும்.
- என்று அலுவலர்கள் பொதுமக்களுக்கு ஆலோசனைகளை வழங்கினர். இந்த விழிப்புணர்வுக் கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள், இளைஞர்கள், அலுவலர்களுக்கு நன்றி தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், தங்களைச் சுற்றி உள்ள உறவினர்களுக்கும் இதனை நல்வழியில் தெரிவிக்கிறோம் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.