திருப்பத்தூர்: தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் அந்தந்த கிராம திருவிழாவின் போது எருது விடும் விழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு பல இடங்களில் எருது விடும் விழா நடைப்பெற்று வருகிறது. ஆனால் அதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட கிராமத்தின் சார்பில் போலீசாரிடமோ அல்லது தீயணைப்பு துறையிடமோ அனுமதி பெற வேண்டும் என்பதும் வழக்கம்.
இந்த நிலையில் ஆம்பூர் சுற்று வட்டாரங்களில் உள்ள கிராம பகுதியில் எருது விடும் விழாவை நடத்த ஆம்பூர் தீயணைப்பு துறை அதிகாரிகளிடம் அனுமதி கடிதம் வாங்க சிலர் சென்றுள்ளனர். அப்போது அங்கு இருந்த தீயணைப்பு துறை அதிகாரி ஒருவர் அனுமதி படிவம் பெறுவதற்கே 3000 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். அதை அந்த நபர் செல்போனில் பதிவு செய்துள்ளார். தற்போது அது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
அதில், அந்த அதிகாரி அனுமதி கடிதம் பெற தற்போது 3000 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் எனவும், உங்களது கிராமத்தில் எருது விடும் விழாவின் போது மற்றதை கவனிக்க வேண்டும் எனவும், இந்த நடைமுறை திருப்பத்தூர் மாவட்டத்தில் மற்ற இடங்களிலும் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் 3000 ரூபாய் கொடுக்கவில்லையென்றால் மாவட்ட நிர்வாகத்திடம் சென்றே அனுமதி வாங்கி கொள்ள வேண்டும் என மிரட்டும் தோரணையில் கூறியுள்ளார்.
அதைத் தொடர்ந்து, எருது விடும் விழாவை நடத்த விழாக்குழுவினர்களிடம் 50 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை லஞ்சம் அளிக்க வேண்டும் என அரசு அலுவலர்கள் கூறுவதாகவும் பாதிக்கபட்டவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் எருது விடும் விழாவை அந்தந்த ஊர் திருவிழாவின் போது அக்கிராம மக்கள் நடத்துவது வழக்கம். ஆனால் ஊர் திருவிழாவின் போது எருது விடும் விழாவிற்கு அனுமதி அளிக்காமல் காலம் தாழ்த்தி, அனுமதி அளிப்பதாக சம்பந்தபட்டவர்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன் எருது விடும் விழாவிற்கு லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் மீது மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எருது விடும் விழாகுழுவினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: "கமிஷன் பங்கு போட தான் 2 மாவட்டமாக பிரிப்பு" - வைரலாகும் திமுக நிர்வாகி வீடியோ!