திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே சாலை அமைப்பதற்காக பள்ளி வளாகம் அருகே தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கி நின்ற மழைநீரில் மூழ்கி இரண்டு பள்ளி மாணவிகள் உயிரிழந்த விவகாரம் (Vaniyambadi school students death issue) தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர், கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி செயலாளர், சாலை ஒப்பந்ததாரர் ஆகியோர் மீது அம்பலூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
வாணியம்பாடி அடுத்த சிக்கனாங்குப்பம் ஊராட்சி ராசன் வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி கோவிந்தராஜ். இவரது மகள் மோனிகா (10). இவர் அதே பகுதியில் உள்ள துவக்கப்பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வேலு என்பவரின் மகள் ராஜலட்சுமி (13) அரசு உயர்நிலைப்பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இதனிடையே, இக்கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தின் அருகே ஒரு மாதத்திற்கு முன்பு சாலை அமைப்பதற்காக சுமார் 10 அடி பள்ளம் தோண்டியுள்ளனர். இதைத் தொடர்ந்து, கடந்த ஒருவார காலமாக அப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக சாலைப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தண்ணீர் தேங்கியுள்ளது.
இதனை அடுத்து, நேற்றிரவு இப்பள்ளத்தின் அருகே விளையாடிக் கொண்டு இருந்த ராஜலட்சுமி, மோனிகா மற்றும் ராஜலட்சுமியின் தம்பி மணிவேல் ஆகியோரில் ராஜலட்சுமியும், மோனிகாவும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். அப்போது, அங்கிருந்த மணிவேல் எழுப்பிய சத்தத்தைக் கேட்டு அங்கு சென்ற அக்கம்பக்கத்தினர், இரண்டு மாணவிகளை சடலமாக மீட்டனர். இது குறித்து தகவலறிந்த அம்பலூர் காவல் துறையினர், மாணவிகளின் உடல்களை உடற்கூராய்வுக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
பொதுமக்கள் சாலைமறியல்: மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், பள்ளியின் அருகே சாலை அமைக்க தோண்டிய பள்ளத்தை மூடாத நிலையில் இருந்துள்ளது. இது தொடர்பாக இப்பணிக்கான ஒப்பந்ததாரர் மற்றும் மாணவர்களுக்கு இது குறித்து எவ்வித விழிப்புணர்வும் ஏற்படுத்தாமல் ஆசிரியர் அலட்சியமாக இருந்ததாகவும் கூறி, உயிரிழந்த பள்ளி மாணவிகளின் உறவினர்கள் நாட்றம்பள்ளி சாலையில் திடீரென அரசு பேருந்தை சிறைபிடித்து சாலைமறியல் செய்தனர். பின்னர், போலீசாரின் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.
உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்திற்கு அரசு உதவும்: இது குறித்து மாவட்ட ஆட்சியர் பாஸ்கர் பாண்டியன் கூறியதாவது, 'இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார். மேலும், பருவமழையால் நீர்நிலைகள் நிரம்பி வருவதால் யாரும் குழந்தைகளை நீர்நிலைகளுக்கு அனுப்ப வேண்டாம் என்றும், இப்பள்ளியின் அருகிலுள்ள பள்ளங்களை விரைந்து மூடுவதற்கான நடவடிக்கையை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து, உயிரிழந்த பள்ளி மாணவிகளின் குடும்பத்திற்கு அரசு சார்பில் அவர்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்வதாகவும் அவர் கூறினார்.
4 பேர் மீது வழக்கு: இச்சம்பவம் குறித்து அங்கு ஆய்வு செய்த வாணியம்பாடி வட்டாட்சியர் சாந்தி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனி சுப்பராயன் ஆகியோர், இப்பள்ளம் குறித்து தலைமை ஆசிரியரிடம் விசாரணை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து, இரண்டு பள்ளி மாணவிகள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சிறுமிகளின் உயிரிழப்பு ஏற்படுத்தும் வகையில் அஜாக்கிரதையாக பாதுகாப்பற்ற முறையில் பள்ளி வளாகம் அருகில் பள்ளம் தோண்டி பணிகள் மேற்கொண்டதாக ஒப்பந்ததரார் பாலாஜி என்பவர் மீதும், இதனை கவனிக்கத் தவறிய சிக்கனாங்குப்பம் ஊராட்சி செயலாளர் தேவன் மற்றும் அரசுப் பள்ளி தலைமையாசிரியர் சரஸ்வதி உள்பட மற்றும் கிராம நிர்வாக அலுவலர் குமார் ஆகிய 4 பேர் மீது அம்பலூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சாலை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மூழ்கி 2 மாணவிகள் பலி! பெற்றோர் கதறல்!