திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியதிற்குள்பட்ட நிம்மியம்பட்டு பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெங்கடேசன் என்பவர் தனது சொந்த இடத்தில் உரிய முறையில் அனுமதி பெற்று ஆழ்துளை அமைக்க முயற்சி செய்தபோது அதே பகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி பிரமுகர் வைரமுத்து என்பவர் ஆழ்துளை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ரகளையில் ஈடுபட்டதுடன் நிம்மியம்பட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்திற்குள் சென்று அங்கு பணியில் இருந்த ஊராட்சி மன்றச் செயலர் ஜீவஜோதி என்பவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனைக் காணொலியாக எடுக்க முயற்சித்தபோது ஊராட்சி மன்றச் செயலர் ஜீவஜோதிக்கும் வைரமுத்துவிற்கும் ஏற்பட்ட தகராறில் வைரமுத்துவை தாக்குவது போன்ற காணொலி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. மேலும் ஊராட்சி மன்றச் செயலர் ஜீவ ஜோதி தாக்கியதாக நாம் தமிழர் கட்சி பிரமுகர் வைரமுத்து வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்தார்.
இந்நிலையில் ஊராட்சி மன்றச் செயலர் ஜீவஜோதியை நிரந்தரப் பணிநீக்கம் செய்யக்கோரி நாம் தமிழர் கட்சியின் சார்பில் நேற்று நிம்மியம்பட்டு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்தச் சம்பவம் குறித்து கடந்த வாரம் வியாழக்கிழமை இருதரப்பினர் அளித்த புகார்களை பெற்றுக்கொண்ட ஆலங்காயம் காவல் துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டு நேற்று ஆலங்காயம் காவல் நிலையத்தில் இருதரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவனருள் உத்தரவின்பேரில் ஆலங்காயம் வட்டார வளர்ச்சி அலுவலர் துரை நிம்மியம்பட்டு ஊராட்சி மன்ற செயலர் ஜீவஜோதியை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
ஆழ்துளை அமைப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் இருதரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ’ஆம்பூர் புறவழிச்சாலையில் விரைவில் மேம்பாலம் அமைக்கப்படும்' - கதிர் ஆனந்த் எம்பி உறுதி