தமிழ்நாடு முழுவதும் 166 இடங்களில் கரோனா தடுப்பு மருந்து சிறப்பு முகாம் இன்று (ஜன.16) தொடங்கப்பட்டது. அதில் திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூர், வாணியம்பாடி ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனையிலும், மாதனூர் பகுதியில் உள்ள சமுதாய சுகாதார நிலையம், குனிச்சி பகுதியில் உள்ள சமுதாய சுகாதார நிலையம், திருப்பத்தூர் மாவட்ட அரசு மருத்துவமனை என மொத்தம் 5 இடங்களில் தடுப்பூசி மையங்கள் முதல்கட்டமாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இதில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனை சார்ந்த 4184 பேர் பதிவு செய்துள்ளனர். அதில் ஒவ்வொரு இடத்திலும் 100 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு முதல்கட்டமாக கோவிட் 19 தடுப்பு தடுப்பு மருந்து சுகாதார பணியாளர்களுக்கு செலுத்தப்படுகிறது.
இந்நிலையில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் கோவிட் 19 தடுப்பு மருந்து சிறப்பு முகாமை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவனருள் தலைமையில் பத்திரப்பதிவு மற்றும் வணிகத்துறை அமைச்சர் கே.சி. வீரமணி தொடங்கிவைத்தார். பின்பு முதல் ஊசியை மருத்துவமனையின் தலைமை மருத்துவர் திலீபனுக்கு செலுத்தினர். தொடர்ந்து மருத்துவர் பிரபாகரன் மற்றும் மருத்துவர் சிவக்குமார் மற்றும் செவிலியர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது.
தொடர்ந்து தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக குனிச்சி சமுதாய சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் சிவனருள் முகாமை தொடங்கிவைத்தார். இந்த தடுப்பு மருந்தானது 28 நாட்கள் இடைவெளியில் இரண்டு தவணைகளாக பயனாளிகளுக்கு கொடுக்கப்பட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முகாமில் மருத்துவர்கள் செவிலியர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதை தவிர்க்க கூடாது- அப்போலோ குழுமத் தலைவர்