திருப்பத்தூர்: காக்கங்கரை ஊராட்சிக்கு உட்பட்ட சுமன்குழிமேடு, மாரிவட்டம், நாராணபுரம் உள்ளிட்டப் பகுதிகளில் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இங்கு கடந்த ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் காக்கங்கரை ஊராட்சித்தேர்தல் நடைபெற்றது. அதில் பட்டியலினத்தைச் சேர்ந்த நந்தினி என்பவர் வெற்றி பெற்று, ஊராட்சி மன்றத் தலைவராக இருந்து வருகிறார்.
இதனையடுத்து அவரை எதிர்த்துப்போட்டியிட்ட மாற்று சமுதாயத்தைச்சேர்ந்த வழக்கறிஞர் சரவணன் என்பவர் தோல்வி அடைந்தார். பின்னர் ஒரு பட்டியலின பெண்ணிடம் நாம் தோற்றுவிட்டோமே என்ற விரக்தியில் அவ்வப்போது சண்டையில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று அக்டோபர் 2அன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்றத் தலைவர் நந்தினி, ஒன்றிய கவுன்சிலர் சாந்தி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உட்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
அப்போது அங்கு சென்ற வழக்கறிஞர் சரவணன், அவரது தம்பி சுரேஷ் ஆகியோர் கிராம சபைக் கூட்டத்தில் பெண் தலைவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ’தலித் பெண் தானே நீ’ என ஆபாசமாகப் பேசி, பணி செய்ய விடாமல் தடுத்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து நேற்று கந்திலி காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட நந்தினி, சாதிப்பெயரை சொல்லி ஆபாசமாகப்பேசி பணி செய்யவிடாமல் தடுத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் புகார் அளித்துள்ளார். போலீசார் நடவடிக்கை எடுக்காததால் இன்று காக்கங்கரையிலிருந்து திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.பாலகிருஷ்ணனிடம் புகார் அளிக்க தனது ஆதரவாளர்களோடு நடந்தே வந்துள்ளார்.
அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியதால் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.ஜி.ரமேஷ் போலீசார் உடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு காணப்பட்டது. எனவே பட்டியலின பெண் தலைவரை சாதிப்பெயரைச் சொல்லி ஆபாசமாகப் பேசிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என போலீசார் மீது பல்வேறு கேள்விகளை அப்பகுதி மக்கள் எழுப்பி வருகின்றனர்.
இதையும் படிங்க: சத்துணவு முட்டைகளை திருடியதாக ஊழியர் மீது தலைமை ஆசிரியர் புகார்