திருப்பத்தூர்: திருப்பத்தூர் அடுத்த ஆம்பூர் ரெட்டித்தோப்பு பகுதியில் தனியார் கலைக்கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரி திருவள்ளூவர் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் நிலையில், இங்கு சுமார் 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த முறை செமஸ்டர் தேர்வு எழுதிய மாணவர்களில் ஒரு சிலரே தேர்ச்சி பெற்றுள்ளாதாகவும், மற்ற மாணவர்களுக்கு ஒற்றை எண்களில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதனால் தேர்வுகளின் முடிவில் குளறுபடி ஏற்பட்டுள்ளாதாக கூறி 100க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வந்த கல்லுரி பேராசிரியர்கள் மாணவர்களை சமாதானப்படுத்த முற்பட்டபோது, இந்த பிரச்னை குறித்து கல்லுரியின் முதல்வர் தங்களை அழைத்து பேசவில்லை எனவும், இது குறித்து புகார் அளித்தும் தற்போது வரை எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பின்னர் இது குறித்து கல்லூரி மாணவர் கூறுகையில், “தற்போது இந்த கல்லூரியில் பல்கலைக்கழகத்தின் முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு பயிலும் பாடப்பிரிவுகள் பி.ஏ. பி.காம், பி.எஸ்.சி.,போன்ற பல்வேறு பாடப்பிரிவுகளின் கீழ் தேர்வு நடத்தப்பட்டு தற்போது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஒவ்வொரு பாடப்பிரிவிலும் தேர்வு எழுதிய 60க்கும் மேற்பட்ட மாணவர்களில் 5 அல்லது 6 பேர் மட்டுமே தேர்ச்சி என தேர்வு முடிவுகள் வந்துள்ளன. மேலும், பல மாணவர்களுக்கு ஒற்றை இலக்க எண்களில் மதிப்பெண்கள் வந்துள்ளன. இதனால் அதிர்ச்சியடைந்து நாங்கள் இது குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டபோது, கல்லூரி நிர்வாகம் முறையாக பதில் அளிக்கவில்லை.
இது குறித்து பல்கலைக்கழக நிர்வாகிகளுக்கு கடிதம் மூலம் புகார் அனுப்பியும் இதுவரையில் எவ்வித நடவடிக்கைகள் எடுக்கவில்லை” என சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்லூரி வளாகத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தனர்.
மேலும், ஏற்கனவே இதே கல்லூரியில் இறுதி ஆண்டு மாணவர்களின் தேர்வு முடிவுகளும் இதே போன்று வந்த நிலையில், அவர்களும் போராட்டத்தில் ஈடுப்பட்டது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இதே போன்று தேர்வு முடிவுகள் வருவதால் மாணவர்களிடையே உயர்கல்வி துறை குறித்து பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. எனவே, இது தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க : நிலவை நெருங்கும் சந்திரயான் 3 - மூன்றாவது முறையாக சுற்றுப்பாதை உயரம் குறைப்பு!