திருப்பத்தூர் மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்காளர்கள் 100 விழுக்காடு வாக்களிக்க வேண்டிய கடமையை வலியுறுத்தி, 'நமது வாக்கு நமது உரிமை, வாக்களிப்பது நமது கடமை, எனது வாக்கு விற்பனைக்கு அல்ல' என்கிற தலைப்பில் கல்லூரி மாணவ, மாணவிகள் தேர்தல் விழிப்புணர்வை நடத்தினர்.
'100% வாக்களிக்க வேண்டும்'
கந்திலி பகுதியில் செயல்பட்டுவரும், அரசு திருவள்ளுவர் பல்கலைக்கழக உறுப்பு கலை, அறிவியல் கல்லூரியில் தேர்தல் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றல், கையெழுத்து இயக்கம் சார் ஆட்சியர் வந்தனா கர்க் தலைமையில் நடைபெற்றது. இறுதியில் சார் ஆட்சியர் வந்தனா கர்க் முதல் கையெழுத்திட்டு, கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கிவைத்தார்.
சார் ஆட்சியர் வந்தனா கர்க் கல்லூரி மாணவ, மாணவிகளிடையே கூறுகையில், "'100 விழுக்காடு வாக்களிக்க வேண்டும், வாக்குகள் விற்பனைக்கல்ல' என்று வலியுறுத்தி அச்சமின்றி 100 விழுக்காடு வாக்களியுங்கள். அனைவரும் வாக்குச்சாவடிக்குச் சென்று 100 விழுக்காடு வாக்கைப் பதிவிடுங்கள்" என்று கூறினார். இறுதியில் வாக்களிப்பது குறித்து வாக்கு இயந்திரத்தைக் கொண்டு ஒத்திகை நடைபெற்றது.
இதில் 200-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர், வட்டாட்சியர் சிவப்பிரகாசம் ஆகியோர் பங்கேற்றனர்.