திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கூட்டணி சார்பில் எஸ்டிபிஐ கட்சி போட்டியிடுகிறது. இந்தத் தொகுதியில் தனது கட்சி சார்பில் உமர் பாருக் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
அதன்படி, உமர் பாருக் தனது ஆதரவாளர்கள், தேமுதிக, அமமுக, அகில இந்திய மஜ்லிஸ் கட்சி, மருது சேனா உள்பட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோருடன் நேற்று (மார்ச்.22) ரெட்டித் தோப்பு, ஆசனாம்பட்டு சாலை பகுதியில் வீதிவீதியாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இந்தப் பரப்புரையின்போது, சுமார் 10க்கும் மேற்பட்ட சிறுவர்கள் கையில் கட்சிக் கொடிகளுடன் எஸ்டிபிஐ வேட்பாளருக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பியபடி சென்றனர். கரோனா பரவல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளத்தால் பள்ளி செல்லும் சிறுவர்கள் கையில் கொடிகளுடன் பரப்புரையில் இறங்கியுள்ளனர். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.