திருப்பத்தூர்: வாணியம்பாடியில் தொடர் கனமழை காரணமாக நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பின. அதன் உபரி நீர் குடியிருப்புகள், அரசு மருத்துவமனை வளாகம், முக்கியச் சாலைகளில் இன்றளவும் வடியாமல் தேங்கியுள்ளன. இதனால் கடந்த நான்கு நாள்களாக அப்பகுதி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த வாணியம்பாடி வணிகர் சங்கம் பேரமைப்பினர், கடைகளை அடைத்து முக்கியச் சாலை வழியாக ஊர்வலமாகச் சென்றனர். அப்போது மழை நீர், நீர் பாதை ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்றக்கோரி நகராட்சி ஆணையாளர், பொதுப்பணித் துறை அலுவலர்களிடம் மனு அளித்தனர்.
ஏழு நாள்களுக்குள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து வணிகர்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர். வாக்குறுதியினை நிறைவேற்ற தவறினால் போராட்டங்கள் தொடங்கும் எனவும் வணிகர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் எச்சரித்துள்ளனர்.
இதையும் படிங்க: டிசம்பர் முதல் வாரம் கன மழை பெய்ய வாய்ப்பு- ஸ்ரீகாந்த், கிரிஷ் தகவல்