திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த மின்னூர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் குமார். இவர் திருப்பத்தூரிலுள்ள சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அருகே கிருத்திகா மெடிக்கல் என்னும் மருந்தகம் நடத்தி வருகிறார். இந்நிலையில் செந்தில்குமார் நேற்று(டிச.9) மருந்தகத்தின் விற்பனையை முடித்து விட்டு, ரூ.80 ஆயிரம் பணத்தை மருந்தகத்திலேயே வைத்து விட்டு கடையைப் பூட்டி விட்டுச் சென்றுள்ளார்.
இதனைத்தொடர்ந்து இன்று(டிச.10) காலை செந்தில்குமார் மருந்தகத்தைத் திறந்த போது, கடையில் வைக்கப்பட்டு இருந்த ரூ.80 ஆயிரம் பணம் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர், கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து பார்த்த போது, மர்ம நபர் ஒருவர் கடையின் வெளியே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை சேதப்படுத்தி, கடையின் பூட்டை உடைத்து உள்ளே வைத்திருந்த ரூ.80 ஆயிரம் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றது தெரிய வந்தது.
அதேபோல், அய்யனூர் பகுதியில் ஜனார்தனன் என்பவருக்கு சொந்தமான எவரெஸ்ட் மருந்தகத்திலும் மர்ம நபர் ஒருவர் பூட்டை உடைக்க முயற்சி செய்துள்ளார். ஆனால், பூட்டை உடைக்க முடியாமல் அருகிலிருந்த பிரபு என்பவருக்குச் சொந்தமான அம்மன் எலக்ட்ரிக் கடையின் பூட்டை உடைத்து கடையைத் திறந்து பார்த்த போது, உள்ளே பைப்புகள் மட்டுமே இருந்ததால் ஏமாற்றத்தில் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார்.
பின்னர், கடையின் உரிமையாளர் பிரபு வழக்கம் போல் இன்று(டிச.10) காலையில் கடையைத் திறக்கும் போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளைப் பார்த்த போது, மர்ம நபர் ஒருவர் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதுகுறித்து பிரபு ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள இரு வேறு கடைகளில் ஒரே நாளில் அடுத்தடுத்து கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் புகுந்த அரிய வகை புகுந்த மிளா மான்..! மயக்க ஊசி செலுத்திப் பிடித்த வனத்துறையினர்..!