திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை, கோடியூர் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்துவருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அத்தகவலின் பேரில் தனிப்படை காவல் துறையினர் ஜோலார்பேட்டை, கோடியூர் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ஜோலார்பேட்டையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த ஜெகன் குமார் (25) என்பவரைக் காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர், ஏகஸ்பா ரேணுகாம்பாள் தெருவைச் சேர்ந்தவர் எனவும், தனது வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வதையும் ஒத்துக்கொண்டார்.
அதன் அடிப்படையில் ஜெகன் குமார், வீட்டில் சோதனை மேற்கொண்ட போது, அதில் இரண்டு மூட்டைகளில், 40 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. உடனே அவற்றைப் பறிமுதல் செய்து மீண்டும் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டபோது, எம்.பி.ஏ. பட்டபடிப்பு முடித்த ஜெகன் குமார் சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காக ஆந்திராவிலிருந்து கஞ்சா கடத்தி வந்து, ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கூலித் தொழிலாளிகள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு சப்ளை செய்வதாகத் தெரிவித்துள்ளார்.
காவல் துறையினரிடமிருந்து தப்பிக்க ஜெகன் குமார் தன்னுடைய புல்லட்டில் காவல் துறையைச் சேர்ந்தவர் எனக் கூறி, போலி அடையாள அட்டை வைத்து ஒரு வருட காலமாகத் தப்பித்ததும் தெரியவந்தது.
மேலும் இவர் கடந்த மாதம் ஆம்பூர் பைபாஸ் சாலையில் ரவிக்குமார் என்பவருக்குச் சொந்தமான 2 கார்களை ஒரு மணி நேரத்தில் அடுத்தடுத்து திருடிச் சென்றிருக்கிறார். இதுதொடர்பாக தெரியவந்ததும் உடனே சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் பதுக்கி வைத்திருந்த 6 லட்சம் 50 ஆயிரம் ருபாய் மதிப்பிலான இரண்டு கார்களை பறிமுதல் செய்தனர்.
இவர் மீது கஞ்சா விற்பனை செய்தது மற்றும் கார் திருட்டு வழக்கு உள்ளிட்ட 2 வழக்குகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: ஆந்திராவிலிருந்து 100 கிலோ கஞ்சா கடத்திவந்த இருவர் கைது