திருப்பத்தூர்: பெரிய மூக்கண்ணூரில் பொங்கலை முன்னிட்டு எருது விடும் போட்டி நடைபெற்றது. மாவட்ட நிர்வாகம் மதியம் இரண்டு மணி வரை மட்டுமே எருது விடும் போட்டி நடத்த அனுமதி கொடுத்திருந்தனர். ஆனால் விழாக்குழுவினர் அளவுக்கு அதிகமாக காளைகளுக்கு டோக்கன் வழங்கி போட்டியை நடத்த ஆரம்பித்தனர்.
இதனால் அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போட்டி நடந்து கொண்டிருந்தது. இதனைத்தொடர்ந்து காவல் துறையினர் போட்டியை நடத்த விடாமல் தடுத்து நிறுத்தி எச்சரித்தனர்.
ஆனால், மீண்டும் காளைகளை ஓட விட்டதால் காவல் துணை கண்காணிப்பாளர் சாந்தலிங்கம் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அனைத்து காவலர்களும் பாதுகாப்பு அளிக்காமல் திரும்பிச் செல்ல முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது விழாக்குழுவினர் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கூடுதலாக அரை மணி நேரம் விழா நடத்த வேண்டும் என சிபாரிசு கேட்டதால் மீண்டும் அரை மணி நேரம் காளைகளை விட அனுமதிக்கப்பட்டது. இதனால் அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட சுமார் ஒன்றரை மணி நேரம் போட்டி நடைபெற்றது.
இதையும் படிங்க: உயிரிழந்த ஜல்லிக்கட்டு காளைக்கு 10ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி அனுசரித்த கிராம மக்கள்