திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த காவலூர் செண்பகதோப்பு பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாமலை. இவர், தனக்குச் சொந்தமான நிலத்தில் பசு மற்றும் காளை மாடுகளை வளர்த்து வருகிறார். இவருக்குச் சொந்தமான " செண்பகதோப்பு டான்" என அழைக்கப்படும் காளையானது, கடந்த 2019 ஆம் ஆண்டு வேலூர் மாவட்டம் பென்னாத்தூரில் நடைப்பெற்ற எருது விடும் விழாவில் கலந்துகொண்டு முதல் பரிசை தட்டிச்சென்றது. அப்போது, இக்காளை முட்டியதில் மூன்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
பின்னர், 2020இல் வேலூர்,திருப்பத்தூர் மாவட்டங்களில் நடைப்பெற்ற எருது விடும் விழாக்களில் பங்கேற்ற செண்பகதோப்பு டான், சுமார் 6 இடங்களில் முதல் பரிசை தட்டிச்சென்றது. இதுவரை இக்காளையிடம் சிக்கி 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இதனால் இக்காளையின் மீது பொது மக்களுக்கு ஒருவித பயமும் ஈர்ப்பும் இருந்தது. குறுகிய காலத்தில் அனைத்து தர மக்களையும் தன்பக்கம் ஈர்த்து கெத்தாக சுற்றிவந்தது செண்பகதோப்பு டான்.
இந்நிலையில், இந்தாண்டு முதன் முதலாக ஜனவரி 14ஆம் தேதி வேலூர் மாவட்டம், அணைக்கட்டில் நடைபெற்ற எருதுவிடும் விழாவிற்கு டான் காளை கொண்டு செல்லப்பட்டது. அப்போது பந்தயத்திற்கு முன்பாக அணைக்கட்டு சாலையில் சென்று கொண்டிருந்த காளையின் மீது எதிர்பாராதவிதமாக அவ்வழியாக வந்த மினி லாரி மோதியது.
இதில் பலத்த காயமடைந்த காளைக்கு இடது பக்கம் பகுதியிலுள்ள 2 விலா எலும்புகள் முறிந்தன. வயிற்றுப் பகுதி கிழிந்து குடல், இரைப்பை வெளியே வந்தது. மேலும் அதிகமான ரத்த போக்கும் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, காளைக்கு வேலூர் அரசு கால்நடை மருத்துவமனையில் 7 மணி நேரம் தொடர்ச்சியாக சிகிச்சை அளித்தனர்.
இந்த அறுவை சிகிச்சையில் காளைக்கு மயக்க மருத்து அளிக்கப்பட்டு விலா எலும்பில் பிளேட் வைத்து இணைக்கப்பட்டது. வெளியே சரிந்த குடல், இரைப்பை பகுதியை மீண்டும் வயிற்றுப் பகுதியில் முறையாக வைத்து கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். அறுவை சிகிச்சை முடிந்து காளை சீராக இருந்து வந்தது.
இந்தநிலையில், நேற்று திடீரென செண்பதோப்பு டான் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தது. இதில் வேதனை அடைந்த காளையின் உரிமையாளர்களும், அப்பகுதி பொதுமக்களும், இறந்த காளையை கண்டு கதறி அழுதனர். பின்னர் காளைக்கு முறையாக இறுதி சடங்குகள் செய்யப்பட்டு, அவற்றை ஊர்வலமாக எடுத்துச் சென்று அண்ணாமலையின் நிலத்தில் அடக்கம் செய்யப்பட்டது.