திருப்பத்தூர்: நகராட்சிக்கு உட்பட்ட கௌதம பேட்டை பகுதியில் 1906ஆம் ஆண்டு பர்மா பௌத்தர்களால் தோற்றுவிக்கப்பட்ட 117 ஆண்டுகள் பழமை வாய்ந்த புத்தர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஆசிய கண்டத்திலேயே புகழ்பெற்ற மூன்று சிலைகளில் ஒன்றான தங்கத்தினாலான சுமார் இரண்டரை அடி உயரம் உள்ள புத்தர் சிலை அமைந்துள்ளது.
இந்த ஆலயத்தில் உள்ள புத்தர் சிலையை ஆண்டுதோறும் தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான தமிழர் திருநாள் பொங்கலை முன்னிட்டு வரும் போகி பண்டிகையன்று பழையதை களைந்து புதிய வாழ்க்கையை தூய்மையாகவும், ஒழுக்கமாகவும் கடைபிடிக்க வேண்டும் என்கிற கருத்தை வலியுறுத்தி புத்தர் சிலையை அப்பகுதி மக்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்று வழிபடுவது வழக்கம்.
இதனைத் தொடர்ந்து இன்று (ஜன.14) அப்பகுதியில் வசிக்கும் சிறுவர்களின் சிலம்பாட்டம் முதற்கொண்டு கிராமிய கலை குழுவின் மயிலாட்டம் மாடாட்டத்துடன் தாரை தப்பட்டை முழங்க புத்தர் சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தென்னிந்திய சாக்கிய பௌத்த சங்கம் நிர்வாகிகளான தலைவர் செயலாளர் பொருளாளர் மற்றும் பொதுமக்கள் அப்பகுதி வார்டு கவுன்சிலர் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:video:ஆவடி பட்டாலியன் மைதானத்தில் டிஜிபி சைலேந்திர பாபு பொங்கல் கொண்டாட்டம்