திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே திம்மாம்பேட்டை அடுத்த புல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் எல்லப்பன் (வயது 53). இவர் அதிமுக ஒன்றிய பொருளாளராக உள்ளார். இவருக்கு சோமு என்ற மகனும், அறிவழகன் என்ற மருமகனும் உள்ளனர். மேலும், இந்த இருவருடன் சேர்ந்து தாமோதரன், கார்த்திக் ஆகிய 4 பேர் கிராம நிர்வாக அலுவலர்(VAO) பணிக்கான அரசு பணியாளர்கள் தேர்வாணையம் சார்பில் தேர்வு எழுதி தோல்வி அடைந்து உள்ளனர்.
இந்நிலையில், இந்த 4 பேருக்கும் கிராம நிர்வாக அலுவலர் அரசு பணி பெற்று தருவதாகக் கூறி எல்லப்பனிடம் கடந்த 2018ம் ஆண்டு நாகப்பட்டினம் மாவட்டம், வழிவளம் கிராமத்தைச் சேர்ந்த தோட்டக்கலைத்துறை உதவி அலுவலர் பாலதண்டாயுதம் மற்றும் அவருடைய கூட்டாளிகள் பரமசிவம், சுரேஷ் ஆகிய 3 பேரும் ரூ. 27 லட்சம் பணத்தை பெற்றுக் கொண்டு, எல்லப்பனின் மகன் மற்றும் மருமகன் ஆகிய 2 பேருக்கு போலியான கிராம நிர்வாக அலுவலர் பணி ஆணைகளை வழங்கியுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து இந்த பணி ஆணைகள் போலியானது, என சில மாதங்களில் தெரிய வந்தது. இந்நிலையில், இது குறித்து எல்லப்பன் கடந்த 2022ஆம் ஆண்டு திம்மாம்பேட்டை காவல் நிலையத்திலும், திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் புகார் அளித்துள்ளார். மேலும், புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் எல்லப்பன், சென்னை உயர்நீதிமன்றத்தில் இது சம்பந்தமாக மனுதாக்கல் செய்தார்.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதிகள் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் இந்த வழக்கை விசாரிக்கையில், தோட்டக்கலை உதவி அலுவலர் பால தண்டாயுதம் மற்றும் அவரது கூட்டாளிகள் பரமசிவம், சுரேஷ் ஆகியோர் பணம் பெற்ற குற்றம் நிரூபிக்கப்பட்டதால், இந்த 3 பேரின் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டது.
அதன் பேரில், கிராம நிர்வாக அலுவலர் வேலைக்கு பணத்தை பெற்றுக்கொண்டு போலியான பணி ஆணையை வழங்கி மோசடி செய்த தோட்டக்கலை உதவி அலுவலர், பாலதண்டாயுதம் (55) என்பவரை கடந்த ஜூன் மாதம் 20ம் தேதி திம்மாம்பேட்டை போலீசார் கைது செய்தனர்.
மேலும், அவரது கூட்டாளிகளான பரமசிவம், சுரேஷ் ஆகிய இருவரையும் போலீசார் தேடி வந்த நிலையில், தற்போது சுரேஷ் கைது செய்யப்பட்டு வாணியம்பாடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறைக்கு சென்று உள்ளார். மேலும், தலைமறைவாக உள்ள பரமசிவத்தை போலீசார் தேடி வருகின்றனர். மேலும், போலி பணி நியமன ஆணை வழங்கி மோசடி செய்த சம்பவத்தில் பலர் சிக்குவார்கள் என்று தகவல்கள் போலீசார் தரப்பில் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க:ரஜினிகாந்தை பார்க்க அதிகாலை 1 மணிக்கு வந்த சேலம் சிறுமி!