திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த வீராங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி. இவரது மனைவி அனுராதா. இவர்களது மகள்களான ஜெயஸ்ரீ ( 11 ஆம் வகுப்பு மாணவி) மற்றும் வர்ஷா ஸ்ரீ (6 ஆம் வகுப்பு மாணவி) ஆகிய இருவரும் ஆம்பூர், கன்னிகாபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பயின்று வந்துள்ளனர்.
கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 அன்று, தண்டபாணி தனது மகள்கள் இருவரையும் இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்ற நிலையில், ஆம்பூர் ஓ.ஏ.ஆர் திரையரங்கத்திற்கு அருகே, பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், ஓசூரில் இருந்து சென்னைக்கு சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, தண்டபாணியின் இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த ஜெயஸ்ரீ மற்றும் வர்ஷா ஸ்ரீ ஆகிய இருவரும் தந்தை கண்முன்னே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், தண்டபாணி படுகாயம் அடைந்த நிலையில், சிகிச்சைக்காக ஆம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனையடுத்து, தலைமறைவாக இருந்த கண்டெய்னர் லாரி ஓட்டுநர் ஜார்ஜ் ஜெயசீலன் என்பவரை, ஆம்பூர் நகர காவல்துறையினர் பிடித்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்து, ஆம்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அதனைத்தொடர்ந்து, ஜார்ஜ் ஜெயசீலன், ஜாமீனில் வெளிவந்த நிலையில், விபத்து ஏற்படுத்திய வழக்கு ஆம்பூர் ஒருங்கிணைந்த குற்றவியல் நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
இந்நிலையில், ஓராண்டிற்குப் பிறகு இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் அக்கா, தங்கை உயிரிழந்த வழக்கில், விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து ஆம்பூர் ஒருங்கிணைந்த குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ரவி உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக, ஜார்ஜ் ஜெயசீலன் கடந்த 2019ஆம் ஆண்டு 22 ஜூன் அன்று திருவண்ணாமலை, மேல்பாச்சார் கிராமத்தில், மதுபோதையில் கார் ஓட்டிச்சென்று, நூறுநாள் பணியாளர்கள் மீது மோதியுள்ளார். இந்த விபத்தில் 1 பெண் உயிரிழந்த நிலையில், 4 பெண்கள் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்து தொடர்பாக, ஜார்ஜ் ஜெயசீலன் மீது தானிபாடி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இவ்வளவு பேர் அழுததைக் கொண்டு விஜயகாந்த் எப்படி வாழ்ந்தார் என உணரலாம்: எம்.பி திருச்சி சிவா