திருப்பத்தூர்: ஆம்பூர் வர்த்தக மையத்தில் மே 13, 14, 15 ஆகிய தேதிகளில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பிரியாணி திருவிழா நடைபெறவிருந்தது. இந்நிலையில் பிரியாணி திருவிழா மழையின் காரணமாக தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா இன்று (மே.12) அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்புக்கு முன்பு திருவிழாவில் கோழி பிரியாணி, ஆடு பிரியாணி மட்டுமே அனுமதிக்கப்படும் எனவும் மாட்டிறைச்சி பிரியாணி இடம் பெறாது என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. இதனை கண்டித்து பிரியாணி திருவிழா நடத்தப்படும் வளாகத்திற்கு முன்பு விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் மாட்டிறைச்சி பிரியாணியை இலவசமாக வழங்கி போராட்டம் நடத்த முடிவு செய்தன.
இதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் துண்டு பிரசுரங்கள் வழங்கி ஆதரவு திரட்டினர். இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் ஆம்பூரில் பல டன் மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆனால் மாட்டிறைச்சியை மாவட்ட நிர்வாகம் பிரியாணி திருவிழாவில் அனுமதிக்காததால் சர்ச்சையானது. இந்நிலையில் ஆம்பூர் பிரியாணி திருவிழா மழையின் காரணமாக தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் பீப்-க்கு தடை; கவலை வேண்டாம்: விசிக இலவசமாக வழங்க முடிவு