திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சிப்பகுதி, உசேன்புரா தெருவில் வசித்து வருபவர் விவசாயி, அஸ்லாம் பாஷா. இவர் அதே பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 2008ஆம் ஆண்டு அவர் வசிக்கும் வீட்டு அருகில் வசித்து வந்த முமேஸ் பேகம் என்பவரிடம் இருந்து 2860 சதுர அடி காலியாக இருந்த வீட்டு மனையை, அவரது மனைவி பர்வீன் பெயரில் வாங்கியுள்ளார்.
வாணியம்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவும் செய்துள்ளார். மேலும் அந்த இடம் உதயேந்திரம் பேரூராட்சி சர்வே எண் 615/25இல் பதிவாகியுள்ளது. இந்நிலையில் பலமுறை அந்த இடத்திற்கு பட்டா வேண்டி விண்ணப்பித்தும் அலுவலர்கள் காலம் தாழ்த்தி வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும் அவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளன. விவசாயத்தில் வரும் வருமானத்தில் பிள்ளைகளின் படிப்பு மற்றும் திருமணங்கள் செய்ததால் அவர் சொந்தமாக வாங்கிய காலிமனையில் ஒரு வீடு கட்ட முடியாத சூழல் நிலவியுள்ளது. இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு, அந்த காலியாக உள்ள வீட்டு மனை இடத்தை கிராம நிர்வாக அலுவலர் அமலா மற்றும் வார்டு உறுப்பினர் செல்வராஜ் ஆகியோர் கொடுத்த தவறான தகவலின்பெயரில் அதிகாரிகள் ஆரம்பச் சுகாதார நிலையம் கட்டுவதற்காக வந்து பார்வையிட்டுச்சென்றுள்ளனர்.
இதுகுறித்து அஸ்லாம் பாஷா கிராம நிர்வாக அலுவலரிடம் நேரில் சென்று கேட்டபோது, அவருக்கு உரிய பதில் அளிக்காமல் அவரை அவமானப்படுத்தி வெளியில் அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் அவர் மனம் உடைந்து தன்னுடைய வீட்டுமனையை மீட்டு தரக்கோரி முதலமைச்சரின் தனிப்பிரிவு, மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர், சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் உள்ளிட்டோருக்குப் புகார் மனுகள் அனுப்பி உள்ளார்.
அரசியல் கட்சியினர் தேர்தல் நேரத்தில் வாக்கு பெற, புறம்போக்கு இடங்களில் வசிப்பவர்களுக்குப் பட்டா வாங்கித் தருவதாகக் கூறி வாக்குகளைப் பெறுகின்றனர். வெற்றி பெற்று பதவிக்கு வந்த பின்னர் அலுவலர்களை கையில் போட்டுக்கொண்டு பட்டா இடம் கூட புறம்போக்கும் என்று கூறி அபகரிக்கும் முயற்சியில் ஈடுபடுவதாக அப்பகுதி மக்கள் வேதனைத் தெரிவிக்கின்றனர்.
இதுபோன்ற அலுவலர்கள் மற்றும் ஆட்சியாளர்களால் நல்லாட்சிக்கு அவப்பெயர் ஏற்படுகின்றது எனவும்; அரசு உயர் அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட நபருக்கு நீதி வழங்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: திருவள்ளூர் பள்ளி மாணவி உயிரிழப்பு; உடற்கூறு ஆய்வு நடைபெறும் மருத்துவமனை முன் போலீஸ் குவிப்பு!