திருப்பத்தூர்: காக்கனாம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் துருவன். மேஸ்திரியான இவர், அண்டை கிராமங்களில் இருந்து கூலி வேலை கேட்டு வருபவர்களை அழைத்துச் சென்று கட்டுமான பணிகளில் ஈடுபட வைத்து வருகிறார். அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையைச் சேர்ந்த பானுப்பிரியா என்பவருக்கும், துருவனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கம் நாளடவைவில் காதலாக மாறிய நிலையில், இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளனர். அதேநேரம் ஏற்கனவே திருமணமான பானுப்பிரியா குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இருப்பினும் துருவனின் பெற்றோர் அனுமதியுடன் இருவரும் 4 நாள்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.
திருமணமான மூன்று நாட்களிலேயே தம்பதிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பானுப்பிரியா வீட்டின் அருகில் இருந்த கிணற்றில் குதித்துள்ளார். கிணற்றில் மனைவி விழுந்ததை கண்ட துருவன் காப்பாற்றுவதற்காக தானும் குதித்து உள்ளார்.
இருவரும் வெளியே வர முடியாத சூழலில் சிக்கிக் கொண்டனர். அந்த வழியாக வந்த ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் கோவிந்தசாமி, கிணற்றிலிருந்து வந்த கூக்குரலை கேட்டு ஆட்டோவை நிறுத்தி பார்த்துள்ளார். சம்பவம் குறித்து ஊர் மக்களுக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் கிணற்றில் உயிருக்கு ஊசலாடி கொண்டிருந்த இருவரையும் காப்பாற்ற முயற்சி செய்தனர்.
துருவனை காப்பாற்றிய நிலையில், பானுப்பிரியா நீரில் மூழ்கினார். இதையடுத்து சம்பவயிடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்பு பானுப்பிரியாவின் உடலை மீட்டனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குருசிலாப்பட்டு காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர. இந்நிகழ்வு குறித்து வழக்குபதிவு செய்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: Erode by-election: ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிப்பு