திருப்பத்தூர் : ஜோலார்பேட்டை அருகே ஓடும் ரயிலில் பெண் பயணிக்குப் பாலியல் துன்புறுத்துதல் கொடுத்ததாக சிஆர்பிஎப் வீரர் கைது செய்யப்பட்டு உள்ளார். கர்நாடக மாநிலத்தில் இருந்து ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் வரை செல்லும் விசாகப்பட்டினம் எக்ஸ்பிரஸ் ரயில், திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே சென்று கொண்டு இருந்தது.
ரயிலின் முன்பதிவு பெட்டியில் பெங்களூரைச் சார்ந்த 38 வயது பெண், தன் கணவருடன் பயணம் செய்து உள்ளார். ஜோலார்பேட்டைக்கும் காட்பாடிக்கும் இடையில் ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது அதே ரயிலில் பயணம் செய்த திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஓடியப்பண்ணயாகநகர் பகுதியைச் சேர்ந்த சிஆர்பிஎப் வீரர் சுரேஷ் (வயது 38) என்பவர் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
ஓடும் ரயிலில் தன்னுடன் அருகில் அமர்ந்து பயணம் செய்த 38 வயது பெண்ணை, பாலியல் ரீதியாக சுரேஷ் தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது. உடனடியாக, இதுகுறித்து அப்பெண் ரயிலில் இருந்த டிக்கெட் பரிசோதகரிடம் புகார் அளித்து உள்ளார். இதனைத்தொடர்ந்து டிக்கெட் பரிசோதகர் காட்பாடி ரயில்வே காவல் துறையினரிடம் புகார் அளித்து உள்ளார்.
காட்பாடி நிலையத்தில் ரயில் நின்றதும் விரைந்த போலீசார் சுரேஷை கைது செய்தனர். இச்சம்பவம் நடந்தது ஜோலார்பேட்டை ரயில்வே எல்லை என்பதால் காட்பாடி ரயில்வே காவல் துறையினர் சுரேஷை ஜோலார்பேட்டை ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்களை சிஆர்பிஎப் வீரர் சுரேஷ் போலீசார் முன்னிலையில் மிரட்டும் பாணியில் பேசி உள்ளார். இது தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் இத்தாலி நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பெண் பயணி ஒருவர், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து ராணிகேத் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஜெய்சால்மருக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ரயில்வே பயிற்சியாளர் ஸ்ரீ பெங்காலி குப்தா என்பவர் இத்தாலி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. ரயில்வே பயிற்சியாளர் பிடியிலிருந்து தப்பிய இத்தாலி நாட்டுப்பெண் சுற்றுலா பயணி கழிவறையில் மறைந்து கொண்டு உள்ளார்.
நடந்த சம்பவம் குறித்து பெண் சுற்றுலாப் பயணி, தனது இந்திய நண்பருக்கு தெரிவித்து உள்ளார். அவர் நடந்தது குறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டு உள்ளார். இதை உடனடியாக கண்ட ரயில்வே ஊழியர் ஒருவர் அந்த இளைஞரைத் தொடர்பு கொண்டு, இத்தாலி நாட்டுப் பெண் பயணிக்கும் ரயிலின் விவரங்கள் குறித்தும் உடனடியாக கேட்டறிந்து ரயில்வே போலீசாருக்குத் தகவல் அளித்து உள்ளார். தக்க சமயத்தில் விரைந்த ரயில்வே போலீசார் அந்த வெளிநாட்டு சுற்றுலா பயணியைப் பாதுகாப்பாக மீட்டனர்.
இதையும் படிங்க : Tamil Nadu weather: தமிழகத்தில் இன்று 24 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!