திருப்பத்தூர் மாவட்டத்தில் தெருவில் விளையாடச் சென்ற 6 வயது சிறுமி வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் தங்களது வீட்டைச் சுற்றியுள்ள பகுதியில் மகளைத் தேடியுள்ளனர்.
அப்போது அதே பகுதியிலுள்ள ஒருவருடைய வீட்டில் 55 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் அந்தச் சிறுமியைக் கடத்தி பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். இதைக் கண்டறிந்த சிறுமியின் பெற்றோர் முதியவரை சரமாரியாகத் தாக்கினர். தொடர்ந்து காவல் துறையினருக்கும் தகவலளித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் குற்றத்தில் ஈடுபட்ட முதியவரிடம் மேற்கொண்ட விசாராணையில், அவர் வீதிவீதியாகச் சென்று காலணி தைப்பவர் என்பது தெரிய வந்தது. தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த முதியவர் மீது 3 பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
அதன் பின்னர் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி காளிமுத்துவேல் முன் நிறுத்தி, விசாரணைக்கு பின்னர் சிறையில் அடைத்தனர். முதியவரால் பாதிப்புக்குள்ளாக்கப்பட்ட சிறுமி தற்போது மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.