திருப்பத்தூர்: வாணியம்பாடி அடுத்த வெள்ளக்குட்டை பகுதியைச் சேர்ந்தவர், ராமமூர்த்தி (65) விவசாயியான இவருக்கு அதேபகுதியில் 3 ஏக்கரில் நிலம் உள்ளது. இந்நிலையில் ராமமூர்த்திக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளாக நிலத்தை குத்தகைக்கு விடுவது தொடர்பாக பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இது தொடர்பாக மகேந்திரனுக்கும், ராமமூர்த்திக்கும் கடந்த சில தினங்களுக்கு முன் தகராறு ஏற்பட்ட நிலையில், ராம மூர்த்தியை மகேந்திரன் மற்றும் சிலர் தாக்கியுள்ளானர். இதுகுறித்து ராமமூர்த்தி ஆலங்காயம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்தச் சூழலில் இன்று காலை ராமமூர்த்தி தனது நிலத்திலிருந்து, வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்ற போது அவரை வழிமறித்த மகேந்திரனின் மகனான 17 வயது சிறுவன், ராம மூர்த்தியை தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் தலை மற்றும் கழுத்துப் பகுதியில் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே ராமமூர்த்தி தலை மற்றும் கழுத்துப் பகுதிகளில் சிதைந்த நிலையில் கொடூரமான முறையில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
உடனடியாக இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆலங்காயம் காவல்துறையினர், ராமமூர்த்தியின் சடலத்தை மீட்கச்சென்ற போது, அவர்களைத் தடுத்து குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி ராமமூர்த்தியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
பின்னர் வாணியம்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் பாண்டியன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு குற்றவாளிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதனைத்தொடர்ந்து ராம மூர்த்தியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், கொலை செய்த சிறுவன் திருப்பத்தூர் நகர காவல்நிலையத்தில் திருப்பத்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் புஷ்பராஜ் முன் சரணடைந்துள்ளார். பின்னர் காவல்துறையினர் அச்சிறுவனை கைது செய்து அவனிடம் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: மெரினாவில் நகைக்காக பெண்ணின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பியோடிய கும்பல்!