நிவர் புயல் காரணமாக கடந்த 2 நாள்களாக பெய்த கன மழையால், வாணியம்பாடி மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள பாலாற்றில் பாலத்தை கடந்து மழை வெள்ளம் ஆற்றில் பாய்கிறது.
பாலாற்றில் செல்லும் தண்ணீரை காண ஏராளமான மக்கள் பாலத்தின் மீது திரண்டு வருகின்றனர். இந்நிலையில், உதயேந்திரம் பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுவன் ரித்திஷ் ஆற்று நீரில் இறங்கி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, அப்பகுதியில் மணல் திருடர்கள் ஏற்படுத்திய ஆபத்தான பள்ளத்தில் சிறுவன் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற உறவினர்கள் சிறுவனின் சடலத்தை மீட்டனர். பின்னர் காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து, பாலாற்று பகுதிகளில் மணல் கொள்ளை நடைபெற்று இருப்பதால் மிகப்பெரிய பள்ளங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் ஆபத்தை உணராமல் யாரும் ஆற்றில் இறங்க வேண்டாம் என உதயேந்திரம் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் வாகனங்களில் ஒலிபெருக்கி மூலம் அறிவித்து வருகின்றனர்.
மேலும் பாலாற்று வெள்ளத்தில் இறங்கி 12 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:கடலில் தவறி விழுந்த மீனவர் சடலமாக மீட்பு!