தூத்துக்குடி: சாத்தான்குளம் அருகே உள்ள ஆத்திக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் தேவதாஸ் மகன் ஜெபராஜ். இவர் படிப்பை முடித்து விட்டு சென்னையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். நேற்று(நவ.27) தமிழ்நாடு முழுவதும் நடந்த காவலர் தேர்வில் பங்கேற்பதற்காக நேற்று முன்தினம்(நவ.26) ஊருக்கு வந்துள்ளார். நேற்று அவர் காவலர் தேர்வை எழுதியுள்ளார்.
இந்த நிலையில் இன்று (நவ.28)அவரது உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக சாத்தான்குளம் பேருந்து நிலையத்தில் நின்றுள்ளார். அப்போது பேருந்து நிலைய மேற்கூரை திடீரென இடிந்து விழுந்துள்ளது. இதில் ஜெபராஜ் படுகாயம் அடைந்தார். உடனே அங்கிருந்தவர்கள் ஜெபராஜை மீட்டு சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பேருந்து நிலையம் மிகவும் பழமையான கட்டடம் என்பதாலும், நேற்று சாத்தான்குளம் பகுதியில் பலத்த மழை பெய்ததாலும் இந்த மேற்கூரை சேதமடைந்து விழுந்துள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாகவே பல முறை இந்த கூரை பெயர்ந்து விழுந்துள்ளது. எனவே பேருந்து நிலையத்தினை முழுமையாக அகற்றி புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில, இன்று(நவ.28) மீண்டும் திடீரென உடைந்து விழுந்த பேருந்து நிலையத்தில் நின்றவர் படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:தஞ்சையில் வயலில் இறங்கிய பள்ளி வேன்: 7 குழந்தைகள் படுகாயம்!