சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 262ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மாவீரன் ஊமைத்துரை தொண்டர் படை சார்பில் முத்தையாபுரத்தில் நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தை கொடியசைத்து அமைச்சர் கடம்பூர் ராஜு தொடங்கிவைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தியாக சீலர்களைப் போற்றும்வகையில் தமிழ்நாடு அரசு அவர்களது பிறந்தநாள் விழா விழாவை அரசு விழாவாக அறிவித்து கொண்டாடிவருகிறது. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன், பாரதியார், நல்லசுவாமிகள், உமறுப்புலவர், சி.பா. ஆதித்தனார், சிவந்தி ஆதித்தனார் போன்றோருக்கு நினைவு மண்டபங்கள், நினைவுத் தூண்கள் அமைத்து அவர்களின் தியாகத்தைப் பெருமைப்படுத்தி உள்ளது.
குற்றம்சாட்டப்பட்டவர்கள் அதிமுகவைச் சேர்ந்தவர்களாக இருந்தபோதிலும் அவர்களை உடனடியாக கட்சியிலிருந்து நீக்கி விசாரணையில் எந்தவித குறுக்கீடும் செய்யாமல் இருந்தது இந்த அரசுதான். கனிமொழி எம்.பி. சொல்வதுபோல அதிமுக அரசு யாருக்கும் பாரபட்சமாக நடந்தது கிடையாது.
பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவத்தைப் பொறுத்தவரையில் தமிழ்நாடு அரசுதான் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. ஒரு சம்பவம் நிகழ்ந்த நேரத்திலேயே குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் அதிமுக அரசு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கோவை மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் அவரை எதிர்த்து கேள்வியெழுப்பிய ஒரு பெண்ணை அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர். அதுமட்டுமில்லாமல், குண்டர்களை வைத்து மிரட்டி மானபங்கம் செய்துள்ளனர்.
சக பெண்ணுக்கு நிகழ்ந்த இந்தக் கொடுமையைக் கண்டித்து ஒரு பெண்ணாக கனிமொழி எம்.பி. கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும்; ஆனால் அவர் செய்யவில்லை. அது பற்றி ஒரு வார்த்தைகூட பேசவில்லை. எனவே, கனிமொழி எம்.பி.யும், திமுகவும்தான் மக்களைப் பாரபட்சமாக நடத்திவருகின்றனர்” என்றார்.
இதையும் படிங்க : விரைவு ரயிலை தேனி வரை நீட்டிக்க வேண்டும் - சு. வெங்கடேசன் எம்.பி., கோரிக்கை