தூத்துக்குடி: வனத்துறை மற்றும் மணிமுத்தாறு அகத்திமலை மக்கள் சார் இயற்கை வன காப்பு மையம் ஆகியவை இணைந்து, ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள கிள்ளிக்குளம் வேளாண் தொழில் முனைவோர் மேம்பாட்டு மையத்தில் வண்ணத்துப்பூச்சி திருவிழாவை நடத்தினர்.
இந்த நிகழ்ச்சியை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமை வகித்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து வண்ணத்துப்பூச்சிகள் குறித்த புகைப்பட கண்காட்சி மற்றும் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டார். அப்போது கல்லூரி மாணவி ஒருவர் கனிமொழியின் கையில் வண்ணத்துப்பூச்சி படத்தினை வரைந்தார்.
இதனையடுத்து விழாவில் பேசிய கனிமொழி, "பட்டாம்பூச்சிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக புகைப்பட கண்காட்சி நடத்தப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தால் இயற்கை வளங்கள் அழிந்து வருகிறது. மாசு தரும் தொழிற்சாலைகள் அதிகரித்து வருகிறது. பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
தற்போது சாப்பிடும் உணவிலும், காற்றிலும் கூட பிளாஸ்டிக் கலந்துள்ளது. வீட்டு தோட்டங்களில்கூட மருந்துகளால் பூச்சி இனங்கள் அழிந்து வருகின்றன. வல்லநாடு வனப்பகுதியில் 100 வகையான பட்டாம்பூச்சிகள் உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர். இளம் வாக்காளர்கள் உலகை பாதுகாக்காதவர்களுக்கு ஓட்டு போட மாட்டோம் என உறுதி ஏற்க வேண்டும்" என்றார்.
இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன், மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ, மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: கனிமொழி எம்பி வீட்டில் புகுந்த மர்ம நபர்.. தூத்துக்குடியில் நடந்தது என்ன?