தூத்துக்குடி மாவட்டத்திற்கு பனமா நாட்டை தாயகமாக கொண்ட ‘எம்.வி. ஜிங்கோ ஆரோ’ என்ற கப்பல் கடந்த 15 ஆம் தேதி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திற்கு வந்தடைந்தது. இக்கப்பலில் 50 காற்றாலை கோபுரங்களும், 33 காற்றாலை இறகுகளும் ஏற்றுமதி செய்யப்பட்டது. 74.90 மீட்டர் நீளமுடைய காற்றாலை இறகுகளை இக்கப்பலிலுள்ள ஹைட்ராலிக் பளுதூக்கி இயந்திரங்கள் மூலம் பாதுகாப்பான முறையில் ஏற்றுமதி செய்யப்பட்டது.
இதற்கு முன்பு வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் கையாளப்பட்ட காற்றாலை இறகின் நீளத்தை விட இது அதிகமாகும். இதைத்தொடர்ந்து இன்று (செப்.23) வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திலிருந்து அமெரிக்காவிலுள்ள நியூ ஆர்லியன்ஸ் துறைமுகத்திற்கு கப்பல் புறப்பட்டுச் சென்றது. வ.உ.சிதம்பரனார் துறைமுகம் காற்றாலை இறகு மற்றும் அதன் உதிரிபாகங்கள் ஏற்றுமதியில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி கண்டு வருகிறது.
இந்த நிதியாண்டு செப்டம்பர் மாதம் வரை 881 காற்றாலை இறகுகளும், 397 காற்றாலை கோபுரங்களையும் கையாண்டுள்ளது. கடந்த நிதியாண்டில் 1667 காற்றாலை இறகுகளும், 648 காற்றாலை கோபுரங்களும் கையாளப்பட்டதன் மூலம் வ.உ.சிதம்பரனார் துறைமுகம் காற்றாலை இறகுகளை ஏற்றுமதி செய்வதற்கான முதன்மை நுழைவாயிலாக திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: காற்றாலை கழிவுகளால் நோய்த் தொற்று அபாயம் - பொதுமக்கள் குற்றச்சாட்டு