தூத்துக்குடி: தூத்துக்குடியில் உள்ள அரசு மருத்துவமனையில் பல நோய்களுக்கு சிகிச்சை அளிக்க போதுமான மருத்துவர்கள் இல்லை எனவும், இருக்கும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களும் சரியாக பணிபுரிவதில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்கள், மருத்துக் கல்லூரி மாணவர்கள் மற்றும் செவிலியர் பள்ளி மாணவிகள் மருத்துவ பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்த மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியை மருத்துவர்களோ, செவிலியர்களோ செய்வதற்குப் பதிலாக பயிற்சி மருத்துவர்கள், மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மற்றும் செவிலியர் பள்ளி மாணவிகள் செய்து வருவதாக கூறப்படுகிறது.
செவிலியர்கள் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட அறைகளில் இருந்து கொண்டு, டேட்டா என்ட்ரி வேலைகளை மட்டும் செய்து வருவதாகவும், நோயாளிகளுக்கு டிரிப்ஸ் ஏற்றும் பணியைக் கூட செவிலியர் பள்ளி மாணவிகள்தான் செய்கின்றனர் எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், மருத்துவர்கள் விசிட் என்கிற பேரில் பார்வையிடுவதோடு நிறுத்திக் கொள்கின்றனர் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால் இளைஞர் கொலை.. தூத்துக்குடியில் நடந்தது என்ன?
இந்நிலையில் காயங்களை சுத்தம் செய்து கட்டு போடும் பயிற்சி மருத்துவர்கள், அவர்களுக்கு பயன்படுத்திய இரத்தம், சதை படிந்த கத்தரிக்கோல் மற்றும் கத்தியை, அவர்களுக்கு உதவியாக இருக்கும் அவர்களது உறவினர்களிடம் கொடுத்து கழுவி தரச் சொல்வதாக புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில், காலில் வெட்டுப்பட்டு சிகிச்சைக்காக வந்த ஒரு நடுத்தர வயது ஆணின் காயத்தை சுத்தம் செய்த பின்னர், அந்த இரத்தம், சதை படிந்த கத்திரிக்கோல் மற்றம் கத்தியை, சுமார் 10 வயது மதிக்கத்தக்க அவரின் மகன் எந்த ஒரு பாதுகாப்புமின்றி வெறும் கைகளால் கழுவும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வரும் நிலையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.