தூத்துக்குடி: முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2ஆம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெறக்கூடிய முக்கிய திருவிழாக்களில் ஒன்று வைகாசி விசாகத் திருவிழா. வைகாசி விசாக நட்சத்திரமானது, முருகப்பெருமானின் ஜென்ம நட்சத்திரமாகும்.
இந்த நாளில் முருகனை வழிபட்டால் ஆண்டு முழுவதும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த திருவிழாவை முன்னிட்டு இன்று (ஜூன் 12) அதிகாலை ஒரு மணிக்கு கோயிலின் நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது.
இதனைத்தொடர்ந்து 9 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகமும், சண்முகருக்கு சிறப்பு அபிஷேகமும் நடந்தது. மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் வசந்த மண்பத்தில் எழுந்தருளுகிறார். அங்கு முனிகுமாரர்களுக்கு சாப விமோர்ச்சனம் அளிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 7.15 மணிக்கு இராக்கால அபிஷேகமும் நடக்கிறது.
பக்தர்களுக்கு அனுமதி: கரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்த திருவிழாவில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலில் குவிந்துள்ளனர். இதற்காக 100 மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.
சுமார் 600-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கடற்கரையில் கண்காணிப்பு கோபுரம் அமைத்து போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். நீராடும் பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் கடலில் பாதுகாப்பு வளையம் அமைத்து, பாதுகாப்பு குழுவினர் பணியில் ஈடுபட்டு வருகிறது. சர்ப்பக் காவடி எடுத்து வர பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: கண்ணுடைய நாயகி அம்மன் திருக்கோவில் வைகாசி பெருவிழா - அரிசி அளக்கும் வைபவம்