தூத்துக்குடி: வெளிநாட்டிலிருந்து ஒரு கப்பல் யூரியா உரத்தை ஏற்றிக்கொண்டு தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திற்கு இன்று (அக்.9) வர உள்ளது.
கரோனா தொற்று ஊரடங்கு காலத்திலும் மக்களின் அத்தியாவசிய தேவைகளை கருத்தில்கொண்டு விவசாயப் பணிகள் தொய்வின்றி நடைபெறுவதற்கு விலக்களித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. இருப்பினும் விவசாயிகளுக்கு, வேளாண் பணிகளுக்கு தேவையான யூரியா உரம் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவி வந்தது. தமிழ்நாட்டில் நிலவிவந்த உரத்தட்டுப்பாட்டை நீக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படன.
அதன்படி, மத்திய அரசிடமிருந்து உர மூட்டைகள் வரவழைக்கப்பட்டு, குறைகளை களைய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுதவிர, போதுமான அளவு உரம் இருப்பு வைப்பதற்காக வெளிநாட்டிலிருந்து உரம் இறக்குமதி செய்யவும் முடிவு செய்யப்பட்டது.
தமிழ்நாட்டில் தென்மாவட்டப்பகுதிகளில் ராபி பருவம் தொடங்கி உள்ள நிலையில், விவசாயத்துக்கு தேவையான உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கவும், தமிழ்நாடு விவசாயிகளின் உரத்தேவையை முழுமையாகப் பூர்த்திசெய்யும் வகையிலும், வேளாண்மை துறை இயக்குநர் தட்சிணாமூர்த்தி, துணை இயக்குநர் (உரம்) ஷோபா ஆகியோரின் முயற்சியால் தேவையான உர ஒதுக்கீடு மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்டுள்ளது.
அதன்படி, யூரியா உரம் தடையின்றி உரிய காலத்தில் விவசாயிகளுக்கு கிடைக்க தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வழிகாட்டுதலின்படி வெளிநாட்டிலிருந்து 45 ஆயிரத்து 161 மெட்ரிக் டன் யூரியா உரம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டிலிருந்து யூரியாவை ஏற்றி வந்த கப்பல் நேற்று (அக்.8) தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தை வந்தடைந்தது.
இதில் தமிழ்நாட்டுக்கு 35 ஆயிரத்து 561 மெட்ரிக் டன் யூரியா ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்துக்கு 6 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியா உள் ஒதுக்கீடு கிடைக்கப் பெறப்பட்டுள்ளது. மேலும் ஒரு கப்பல் யூரியா உரத்தை ஏற்றிக்கொண்டு தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திற்கு இன்று (அக்.9) வர உள்ளது. எனவே விவசாயிகளுக்கு தேவையான யூரியா உரம் இனி தட்டுப்பாடின்றி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தூத்துக்குடி வந்தடைந்த உரமூடைகள் மாவட்டத்தின் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் மூலமாகவும், தனியார் உரக்கடைகளின் மூலமாகவும் தங்கு தடையின்றி விவசாயிகளுக்கு கிடைக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
இதனை விவசாயிகள் தங்கள் ஆதார் அட்டையைப் பயன்படுத்தி அருகில் உள்ள உரக்கடைகளில் யூரியா உரத்தை தேவையான அளவுக்கு வேளாண்மைத் துறையின் உர பரிந்துரைப்படி பெற்று பயனடையுறுமாறு பெற்றுக்கொள்ளலாம் என தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் முகைதீன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பட்டுப்போகும் பட்டுப்புழு வளர்ப்பு - வேதனையின் உச்சத்தில் விவசாயிகள்...