சென்னை: ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட உயர் பதவிகளுக்கான சிவில் சர்வீஸ் தேர்வுகளை ஆண்டுதோறும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகிய மூன்று நிலைகளில் இந்த தேர்வை யுபிஎஸ்சி(UPSC) நடத்துகிறது.
அந்த வகையில், 2022ஆம் ஆண்டில் நாடு முழுவதும் 180 ஐஏஎஸ், 200 ஐபிஎஸ் உள்ளிட்ட 1,022 பணி இடங்களுக்கு சிவில் சர்வீஸ் தேர்வு நடத்தப்பட்டது. முதற்கட்ட தேர்வு கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடத்தி முடிக்கப்பட்டு, அந்த மாதமே முடிவுகள் வெளியாகின. இதனையடுத்து டிசம்பர் மாதம் முக்கிய தேர்வு முடிந்து, டிசம்பர் 6ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகின.
யுபிஎஸ்சி நேர்முகத் தேர்வு இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை நடத்தப்பட்டன. இதற்கான முடிவுகள் இன்று (மே 23) வெளியிடப்பட்டது. நாடு முழுவதும் யுபிஎஸ்சி இறுதி தேர்வில் 933 மூன்று பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்தத் தேர்வில் இந்திய அளவில் இஷிதா கிஷோர் முதலிடத்தையும், கரிமா லோஹியா 2வது முதலிடத்தையும் உமா ஹராதி 3வது முதலிடத்தையும் பிடித்தனர். யுபிஎஸ்சி தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 39 பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
முதல் நான்கு இடங்களை பெண்கள் பிடித்துள்ளனர். இந்த நிலையில், சென்னை பெரம்பூரைச் சேரந்த ஜீஜீ என்ற மாணவி தமிழ்நாடு அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இந்திய அளவில் 107வது இடம் பிடித்துள்ளார். எலக்ட்ரீஷியன் தொழில் செய்பவரின் மகளான இவர், சென்னை ஸ்டெல்லா மேரிஸ் பெண்கள் கல்லூரியில் படித்து வருகிறார். முதல் முயற்சியிலேயே யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
இதே போன்று, தென்காசி மாவட்டம், திருவேங்கடம் கிராமத்தை சேர்ந்த ரங்கநாதன் - தனலட்சுமி தம்பதியர் மகன் ராமகிருஷ்ணன் தமிழ்நாடு அளவில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இவர் இந்திய அளவில் 117வது இடத்தை பிடித்துள்ளார். ராமகிருஷ்ணன் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய பொறியியல் துறை பணியாளர்களுக்கான தேர்வில் வெற்றி பெற்று, 2019ல் நாமக்கல் மாவட்ட தொழில் மையத்தில் உதவி பொறியாளராக பணியமர்த்தப்பட்டார்.
மேலும் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.இ. மெக்கானிக்கல் 2016இல் முடித்துவிட்டு நான்காவது முயற்சியில் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். அதேபோல் புதுக்கோட்டையில் துணை ஆட்சியராக பணியாற்றி வரும் சரவணன், 147வது இடம் பிடித்துள்ளார். இதே போன்று, சென்னையைச் சேர்ந்த மதிவதினி இராவணன் யுபிஎஸ்சி தேர்வில் தேசிய அளவில் 447வது இடத்தை பெற்று அசத்தியுள்ளார் . இவர், தற்போது ரிசர்வ் வங்கியில் பணியாற்றி வருகிறார்.
இதையும் படிங்க: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர 3 லட்சம் பேர் விண்ணப்பம்!